| சரியையிற் றாழ்க்கலை கிரியையிற் பணிக்கலை | | யோகத் துய்க்கலை பாகமு நோக்கலை | | நாளையின் றெனவொரு வேளையு நவிற்றலை | | ஈண்டெனக் கருளுதி யிறைவ | 45 | பூண்டுகொண் டிருப்பனின் பொன்னடித் துணையே. |
நேரிசை வெண்பா 594. | பொன்னேயல் லாமற் பொருளோ டுடலுயிர்விற் | | றென்னே மணியொன் றெவர்கொள்வார் - கொன்னே | | குருமாசி லாமணியைக் கொள்வோர்கொள் ளாமுன் | | தருவார்மற் றிம்மூன்றுந் தான். |
கட்டளைக் கலித்துறை 595. | தருமணிக் கோவைத் தருண்ஞான சம்பந்தன் றண்கமலைக் | | குருமணிக் கோவை நிகர்மாசி லாமணி கோத்திடலால் | | ஒருமணிக் கோவையிம் மும்மணிக் கோவையொண் சங்குகஞ்சம் | | பொருமணிக் கோவைப் பொருளாக்கொள் ளாரிது பூண்டவரே. |
(41-5) தாழ்க்கலை - தங்கச்செய்யாயாய்; தாமதிக்கச் செய்யாயாய்; முற்றெச்சம். பாகம் - பரிபக்குவம். சரியை முதலியன செய்யென்று பணிந்து நீட்டியாமல் இப்பொழுதே அருள்புரிவாயாக.
594. உலகத்திலுள்ள மணியைப் பொன்மாத்திரம் கொடுத்துக் கொள்வார்; இந்த மாசிலாமணியைக் கொள்பவரோ உடல் பொருளாவியெனும் மூன்றையும் ஈவாரென்க. ஞானாசிரியருக்கு இம் மூன்றையும் அர்ப்பணம் செய்யும் மரபை நினைந்து இங்ஙனம் கூறினர்.
என்னே - என்ன வியப்பு.
595. தரு மணி கோ வைத்தருள் - தன்பாற் புக்கார்பால் பேரின்பத்தைத் தரும் அழகிய திருக்கண்ணை வைத்துச் சக்ஷூ தீக்ஷையைச் செய்தருள்கின்ற. (பி-ம்.) ‘தருஞான சம்பந்தன்’. தண் கமலையிலேயுள்ள குருவாகிய மணிக்கோவை ஒக்கும் மாசிலாமணியை வைத்துக் கோக்கப் பெறுதலால்; மணிக்கோ - நாயகமணி. இந்த மும்மணிக் கோவையாகிய பிரபந்தம் அந்நாயக மணியாகிய ஒன்றைக் கோக்கப் பெறுதலால் ஒரு மணிக்கோவையாம் ஆயிற்று. இக்கோவையைக் கற்போர் தேவர்களுக்கேயுரிய சங்கநிதி முதலியவற்றையும் பொருளாகக் கொள்ளார். சங்கு - சங்க நிதியை. கஞ்சம் - பதுமநிதியை. பொருமணி - தன்னைத் தானே ஒத்த சிந்தாமணியை. கோவை - காமதேனுவை. பொருமணிக்கிவையெனத் திரிபு நோக்கி வல்லினம் மிக்கது.
|