பக்கம் எண் :

458குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

596.
தடுத்த பிறவித் தளையாம் விலங்கு தனைமுறித்து
விடுத்த கருணைக் கடன்மாசி லாமணி மெய்ப்புகழாற்
றொடுத்த தமிழ்மும் மணிக்கோவை நித்தந் துதிக்கவல்லார்
எடுத்த சனனத்தி லெய்தாத பேரின்ப மெய்துவரே.        
(32)

597.
உள்ளத் தருணின் றுணர்ந்தவென் னாவி லுறைந்தவெள்ளை 
வள்ளக் கமலத் தவண்மாசி லாமணி வண்புகழில் 
எள்ளத் தனையள வோர்தொடை யாக்கி யிசைத்தனளாற் 
கள்ளப் புலன்கொண் டுரைத்தே னலனிக் கவிமுற்றுமே.     
(33)

598.
விரிக்குஞ் சரியையிப் பாமாலை சேர்த்தது மெய்க்கிரியை  
தரிக்கும் படிக்கின்று சாற்றிய தேமற்றென் றண்டமிழைத்  
தெரிக்கின்ற போதருள் செய்தது வேசிவ யோகமுண்மை  
பரிக்கின்ற ஞானமொன் றேமாசி லாமணி பாலித்ததே.      
(34)

    பின்னே வரும் இரண்டு செய்யுட்கள் பழைய பதிப்புகளிற் காணப்படுகின்றன.

நேரிசை யாசிரியப்பா
தமிழ்மணங் கமழுங் கமலையம் பதிவாழ்
ஞானசம் பந்தனை வணங்கின்
ஈனசம் பந்த மில்லைவீ டெளிதே.

வஞ்சித்துறை
                 மாசி லாமணித்
                 தேசி காவென
                 பேசு வோர்கண்முப்
                 பாச மோடுமே.

பண்டார மும்மணிக்கோவை முற்றிற்று.


    596. எடுத்த சனனத்தில் - இம்மையிலே யென்றபடி.

    (பி-ம்.) ‘அடுத்த சனனத் தடைவர்தப் பாரரு ளானந்தமே’.

    597. வெள்ளை வள்ளக் கமலத்தவள் - கலைமகள்.

    598. ஞானாசிரியருக்குச் சாத்துதற்கு இப்பாமாலையை இயற்றியது சரினயா யாகும். அவர் தரிக்கும்படி இதனைச் சாற்றியது கிரியையாகும்.

    (பி-ம்.) ‘சாத்தியதே’.

    (பி-ம்.) ‘தண்டமிழ்நீ’. இதனை அவர் ஏற்றுக்கொண்ட போது திருவருள் புரிந்ததே சிவயோகமாகும். அடியேனுக்கு அவர் வழங்கியது ஞானம்.