பக்கம் எண் :

462குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

-இருசீரோரடி அம்போதரங்கம்-

                அழல்வி ழித்தனை.         பவமொ ழித்தனை.

                ஆற ணிந்தனை.              மாற ணிந்தனை.

                மழுவ லத்தினை.           முழுந லத்தினை.

                மாந டத்தினை.             மானி டத்தினை.

                அலகி றந்தனை.            தலைசி றந்தனை.

                அருள்சு ரந்தனை.          இருடு ரந்தனை.

                உலக ளித்தனை.           தமிழ்தெ ளித்தனை.

                ஒன்று மாயினை.           பலவு மாயினை.


-தாழிசை-
1.
அலகில்பல புவனங்க ளடங்கலுமுண் டொழிப்பாய்க்குக்    
கொலைவிடமுண் டனையென்று கூறுவதோர் வீறாமே.    

2.
பயின்மூன்று புவனமுங்கட் பொறிக்கிரையாப் பாலிப்பாய்க் 
கெயின்மூன்று மெரிமடுத்தா யென்பதுமோ ரிசையாமே. 

3.
அடியவரே முக்குறும்பு மறவெறிந்தா ரெனினடிகள்      
விடுகணைவிற் காமனைநீ வென்றதுமோர் வியப்பாமே.      

4.
இக்கூற்றின் றிருநாமத் தொருகூற்றுக் கிலக்கென்றால்    
அக்கூற்றங் குமைத்தனையென் றிசைப்பதுமோ ரற்புதமே.    

    (இருசீரோரடி அம்போதரங்கம்.) பவம் - பிறப்பு. மால் தணிந்தனை. மாநடத்தினை - பரமானந்த தாண்டவத்தை உடையாயை. (பி-ம்.) ‘மானடத்தினை’. மான் இடத்தினை - மானை இடத்திருக்கரத்திலே உடையாய்; மான்: உமா தேவியுமாம். அலகு - அளவு. இருள் துரந்தனை - அஞ்ஞானத்தை ஓட்டினை. ஒன்றும் ஆயினை - பொருந்தும் தாயினது தன்மையை உடையாய்.

    (தாழிசை.) 1. அடங்கலும் - முற்றும். உண்டொழித்தலாவது - சங்காரஞ் செய்தல். வீறு - வேறொருவர்க்கில்லாத சிறப்பு.

    2. கட்பொறிக்கு - கண்ணாகிய இந்திரியத்திற்கு. எயில் மூன்றும் - திரிபுரங்களையும்.

    3. முக்குறும்பு - காமம் வெகுளி மயக்க மென்பன.

    4. இக்கு ஊற்றின் திருநாமத்து ஒரு கூற்றுக்கு இலக்கு - கருப்பஞ்சாற்றினது ஊற்றைப்போல் இனிமையைத் தரும் நின் திருநாமத்தின் ஒரு பகுதியினால் அழிக்கப்படும் இலக்கு. கூற்றம் - யமன்; “அருநாம மெனச் சொலுநின் னாயிரநா மத்துளொரு, திருநாமங் கூற்றடுநின் றிருவடிதாக் குதன்மிகையே” (வாட்போக்கிக் கலம்பகம்.)