பக்கம் எண் :

472குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

பூணு மாசைமற் றொன்றே யுடல்விடும்    
   போது நன்மணி கர்ணிகைப் பூந்துறை    
பேணு மாறு பெறவேண்டு மப்புறம்    
   பேயொ டாடினு மாடப் பெறுதுமே.    
(17)

616.
பெற்ற மூர்வதும் வெண்டலை யோட்டினிற்
    பிச்சை யேற்றுத் திரிவதும் பேய்களே
சுற்ற மாகச் சுடலையில் வாழ்வதும்
    தோலு டுப்பதுந் தொண்டர்க் கரிதன்றாற்
கற்றை வார்சடைக் காசிப் பதியுளீர்
    கற்பந் தோறுங் கடைநா ளுலகெலாம்
செற்று மீளப் படைக்கவும் வேண்டுமே
    தேவ ரீர்பதஞ் சிந்திப்ப தில்லையே.    
(18)

நேரிசை வெண்பா
617.
இல்லாளே முப்பத் திரண்டறமுஞ் செய்திருப்பச்
செல்லார் பொழிற்காசிச் செல்வனார் - மெல்லப்
பரக்கின்ற புண்ணீர்ப் படுதலைகொண் டையம்
இரக்கின்ற வாறென்சொல் கேன்.    
(19)

மணிகர்ணிகை - கங்கைத் துறைகளுள் ஒன்று; இறந்தவர்களுக்குக் காதில் பிரணவத்தை உபதேசித்தருளுதலின் இத்துறை இப்பெயர் பெற்றது; மந்திரம் இறப்பவருடைய காதுக்கு அலங்காரமாகும் இடம் என்றும் பொருள் கூறுவர் ஒரு சாரார்; மணி - பிரணவமந்திரம். மணிகர்ணிகைத் துறையில் இறப்பவர் சிவசாரூபம் பெறுதல் நூற்றுணிபாதலின் அத்துறையில் உடல் விடுதலை வேண்டினார். பேயொடாடுதல் சிவபெருமான் இயல்பு. அவ்வியல்பு தமக்கு வருமென்றபடி. (பி-ம்.) ‘ஆடிப்பெறுதுமே’.

    616. பெற்றம் - இடபம். தோல் - புலித்தோல். அரிது - பன்மை ஒருமை மயக்கம். கடை நாளில். செற்று - அழித்து. சிவபெருமான் செயலைச்சாரூபம் பெற்றவர் செயலாகக் கூறியபடி. பதமென்றது சாரூப பதவியை. பெற்ற மூர்தல் முதலியன அடியேங்களுக்கு எளியனவாயினும், உலகங்களை அழித்துப் படைத்தல் எங்களுக்குத் துன்பம் தருமே; என் செய்வோமென்றபடி. அப்பதவியை யாம் சிந்திப்பதில்லை யென்பது பழிப்பதுபோல்ப் புகழ்தலென்னும் அணியின் பாற்ப்படும்.

    617. இல்லாள் - மனைவி; இங்கே, உமாதேவியார்; பொருளில்லாதவளென்று வேறொரு பொருள் தோற்றியது, செல்வனார் - அகிலேசர்; செல்வ முடையவரென்னும் பொருள் தோற்றியது, புண்ணீர் - இரத்தம். ஐயம் - பிச்சை.

    பொருளில்லாதவளாகிய மனைவி முப்பத்திரண்டு அறங்களையும் செய்யச் செல்வராகிய கணவர் தலையோட்டில் பிச்சையெடுப்பது என்ன வியப்பு என்றபடி.