பக்கம் எண் :

484குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
640.
கொள்ளையிடச் சிலர்க்குமுத்திச் சரக்கறையைத்
   திறந்துகொடுத் தனந்த கோடிப்
பிள்ளைகள்பெற் றுடையபெரு மனைக்கிழத்திக்
   கேகுடும்பம் பேணு கென்னா
உள்ளபடி யிருநாழி கொடுத்ததிலெண்
   ணான்கறமு மோம்பு கென்றார்
அள்ளல்வள வயற்காசி யாண்டகையார்
   பெருந்தகைமை யழகி தாமே.    
(41)


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
641.
அழகு துயில்குங் குமக்கொங்கை
    யணங்கே யெங்க ளருட்காசிக்
குழகர் மகற்கு மகட்கொடுத்த
    குடியிற் பிறந்த குறமகள்யான்
ஒழுகு தொடிக்கைக் குறியுமுகக்
    குறியுந் தருமொள் வளைக்குறியும்
புழுகு முழுகு முலைக்குறியு
    முடையா ரவர்பொற் புயந்தானே.    
(43)

    640. சரக்கறை - நிதி முதலியன வைக்கப் பெற்றிருக்கும் அறை; “சரக்கறை யோவென் றனிநெஞ்சமே” (தே.) குடும்பம் பேணுக என்னா - குடும்பத்தைப் பாதுகாப்பா யென்று. வளவயற்காசி யென்றது, பின்னும் மிகுதியாக அளிக்கும் வாய்ப்புடையவரென்னும் குறிப்புடையது.

    அயலாருக்குச் சரக்கறையையே கொடுத்துவிட்டுப் பல பிள்ளைகளையுடைய தம் மனைவிக்கு இரு நாழி நெல் மட்டும் கொடுத்தது பெருந்தகைமையாகாதென்று புலப்படுத்தியபடி; இது பழிப்பதுபோலப் புகழ்தல். பெருந்தகைமை - வள்ளன்மை.

    “கண்ணகன் ஞாலத் தெண்ணில்பல் கோடிப், பிள்ளைகள் பெற்ற பெருமனைக் கிழத்திக்கு, நெல்லிரு நாழி நிறையக் கொடுத்தாங், கெண்ணான் கறமு மியற்றுதி நீயென, வள்ளன்மை செலுத்து மொண்ணிதிச் செல்வ” (463) என்பது இதனோடு ஒப்பு நோக்கி இன்புறற்பாலது.

    641. மகற்கு - முருகக் கடவுளுக்கு. மகள் - வள்ளி நாயகியை. குடி - குறவர் குடி. உன்னுடைய கைக்குறி முதலியன அகிலேசர் பொற்புயத்தைத் தரும்; நீ கவலா தொழிக என்றாள் (181)