அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 659. | இலைமுகங் குழைத்த பைம்பூ ணேந்திள முலையோ டாடும் | மலைமுகங் குழைத்த காசி வரதர்கண் டிலர்கொன் மாரன் | சிலைமுகக் கணைக்கெம் மாவி செகுத்துண வருத்தத் திங்கட் | கலைமுகம் போழ்ந்த காயங் களங்கமாய் விளங்கு மாறே. | | | |
கட்டளைக் கலித்துறை 660. | விளங்கனி யொன்றெறி வெள்விடை யோடும் விழிக்கணுழைந் | துளங்கனி யப்புகுந் தாய்விர கானலத் துற்றதென்னாம் | வளங்கனி பண்ணை வயல்சூழவிமுத்த வாணநறுங் | களங்கனி யென்றுமை கைக்கிளி பார்க்குங் கறைக்கண்டனே. | | | |
சிவக்கொழுந்தைப் போற்று; அடிக்கு அஞ்சலிசெய். பற்று - பற்றுவாயாக. யமனடியை மாற்றுதற்கு வேறு புகலில்லை.
இச்செய்யுளின் எதுகை முதலியன 687-ஆம் செய்யுளிலும் வந்துள்ளன.
659. தலைவி கூற்று.
இலை வடிவமான ஆபரணத்தைக்கண்டு இலை குழைந்தது. எம் ஆவியைச் செகுத்து உணவாக அருத்த. காயம் - புண், அம்பு எய்வோர் முதலிற் பிற இடங்களில் எய்து பழகுதல் இயல்பாதலின் (புறநா. 169 : 9-11; சீவக. 995, உரை) மன்மதன் எம் ஆவியை எய்து அழித்தற்கு முன் சந்திரனது கலைகள் பொருந்திய முகத்தின்மேல் எய்து பழகினான்; அதன் முகத்தில் உண்டான புண் களங்கம்போல விளங்குகின்றது. சந்திரனிலுள்ள கலைமானை இலக்கமாகக் கொண்டு அதன் முகத்திலெய்தானென்பதும் ஒன்று. இது தற்குறிப்பேற்ற அணி.
களங்கமாய் விளங்குமாற்றைக் காசிவரதர் கண்டிலர்கொல்?
660. தோழி கூற்று.
கஞ்சன் ஏவலால், கண்ணபிரானைக் கொல்வதற்குக் கபித்தாசுரனென்பவன் பழுத்த விளாமரமாகவும் வத்ஸாசுரனென்பவன் பசுவின் கன்றாகவும் வந்து தோன்ற, கண்ணபிரான் அக்கன்றை எடுத்து விளாம்பழத்தின் மேலெறிந்து இருவரையும் ஒருங்கே மாய்த்தனரென்பது பாகவத வரலாறு. விடையென்றது திருமாலை. விழிக்கண் நுழைந்து உள்ளம் உருகும்படி புகுந்தாய்; 642; “கண்வழி நுழையுமோர் கள்வனே கொலாம்” (கம்ப. மிதிலைக் காட்சிப். 55). விரகானலத்து உற்றது என் ஆம் - விரகத் தீயினிடையே பொருந்திய நிலை என் ஆகும்? களங்கனி - களாப்பழம்; அது கறைக் கண்டத்துக்கு உவமை; “களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன்” (தொல். புறத். 26. ந. மேற்.) தேவர் உயிர் கவரவந்த நஞ்சத்தைக் கண்டத்திற் செறிந்த தேவரீர் இவளது உள்ளத்திருந்தும் இவள் உயிரைக் கவராநிற்கும் விரகானலத்தை வாளா வளரவிடுதல் அறனன்றென்பது குறிப்பு.
|