பக்கம் எண் :

காசிக் கலம்பகம்503

 கட்டளைக் கலிப்பா
677.
மான மொன்று நிறையொன்று நாணொன்று
    மதிய மொன்று குயிலொன்று தீங்குழற்
கான மொன்று கவர்ந்துணு மாமதன்
    கணைக்கி லக்கென் னுயிரொன்று மேகொலாம்
வான மொன்று வடவண்ட கோளமே
    மவுலி பாதல மேழ்தாண் மலையெட்டும்
நான மொன்று புயமுச் சுடருமே
    நயன மாப்பொலி யும்மகி லேசனே.    
(79)

நேரிசை வெண்பா
678.
அகிலாண்ட மாயகண்ட மானவகி லேசா  
முகிலாண்ட சோலையவி முத்தா - நகிலாண்ட  
சின்னவிடைப் பாகா திருநயனஞ் செங்கமலம்  
அன்னவிடைப் பாகா வருள்.    
(80)

     அறுசீரக் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
679.
அருகுமதன் குழைத்தகழை தெறித்தமுத்தே  
    றுண்டெழுவண் டரற்று மோசை
பெருகுசிறு நாணொலியென் றறிவழிந்து
    பேதுறுமிப் பேதைக் கென்னாம்
உருகுபசும் பொன்னசும்பு தசும்புவிசும்
    பிரவியென வுடைந்து கஞ்சம்
முருகுயிர்க்கும் பொலங்குடுமி விமானத்திற்
    பொலிந்தவவி முத்த னாரே.    
(81)

    677. தலைவி கூற்று.

    மானத்தை மதியமும், நிறையைக் குயிலும்; நாணை வேய்ங் குழலோசையும் கவர்ந்துண்ணும்; நிரனிறை. இப்பொருள்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றையே உண்ண, மன்மதன் கணைகள் ஐந்தும் என் உயிர் ஒன்றையே உண்ணுகின்றன. வானமே வடிவாகும். அண்டகோளமே மவுலி; மவுலி - முடி. மலையெட்டும் புயம். “வேத மொழிவிசும்பு மேனி சுடர்விழிமண், பாதந்திருப்பா திருப்புலியூர் - நாதர், பரமாம் பரமாம் படுகடலெண்டிக்கும், கரமா மவர்க்குயிர்ப்பாங் கால்” (திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், 2.)

    678. சின்ன இடையையுடைய உமாதேவியாரை ஒரு பாகத்திலுடையாய்; திரிபு நோக்கிப் பகரம் மிக்கது. “பொறுத்த சின விடையாரும் பொருந்துசின விடையாரும்” (அருணைக். 71). தம் திரு விழிகள் செந்தாமரையைப் போன்ற திருமாலாகிய இடபத்தைச் செலுத்துவோய்.

    679. தோழி கூற்று.