பக்கம் எண் :

காசிக் கலம்பகம்509

691.
குருகை விடுத்தா ளெனக்குருகே
    கூறாய் சுகத்தை விடுத்தாளென
றருகு வளருஞ் சுகமேசென்
    றறையாய் நிறைநீர் தெரிந்துபால்
பருகு மனமே யனம்விடுத்த
    படிசென்று றுரையாய் படிவருளத்
துருகு பசும்பொன் மதிற்காசி
    யுடையார் வரித்தோ லுடையார்க்கே.     
(93)

692.
உடுத்த கலையு மேகலையு
    மொழுகும் பணியும் விரும்பணியும்
தொடுத்த வளையுங் கைவளையுந்
    துறந்தா ளாவி துறந்தாலும்
அடுத்த துமது பரந்தாம
    மதனா லிதழிப் பரந்தாமம்
விடுத்து விடுவா ளலளெனப்போய்
    விளம்பீர் காசி வேதியர்க்கே.    
(94)

    691. தலைவி பறவைகளைத் தூதுவிடுதல்.

    குருகு - வளையல். குருகே - நாரையே. சுகத்தை விடுத்தாள் - இன்பத்தை நீத்தாள். சுகமே - கிளியே. அனமே - அன்னப் பறவையே. அனம் விடுத்த படி - சோற்றை உண்ணாமல் நீத்த திறத்தை. படிவர் உளத்து - தவவேட முடையார் உள்ளத்தைப் போல. வரித்தோல் உடையார்க்கு - புலித்தோலாகிய உடையையுடைய அகிலேசருக்கு.

    692. தோழி கூற்று. உடுத்த கலை - ஆடை. ஒழுகும்பணி - செய்யும் வேலை. விரும்பு அணி - இதுகாறும் விரும்பிநின்ற ஆபரணம். தொடுத்தவளை - இசையோடு தொடுத்த வள்ளைப்பாட்டு; வளை: இடைக்குறை. உமது பரந்தாமம் அடுத்தது; பரந்தாமம் -முத்தி. இதழிப்பரந்தாமம் - கொன்றையாகிய மேலான மாலை. கொன்றை மாலையை இவளுக்குக் கொடாமல் இருக்கும் நினைவுண்டேல் அது கூடாத செயல்: இப்போது நீர் கொடாவிட்டாலும் அது காரணமாக இவள் உயிர் துறந்தால் சாரூபம் பெற்று அம்மாலையைப் பெறுவாள்; எங்ஙன மாயினும், இவள் கொன்றைமாலையைப் பெறுதல் ஒருதலை.