பக்கம் எண் :

518குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

704.
பஞ்சப் பிதந்தரு செய்யபொற்
   பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென்
   னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந்
   நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய்
   சகல கலாவல்லியே.
(5)

705.
பண்ணும் பரதமுங் கல்வியுந்
   தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல்
   காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங்
   கனலும்வெங் காலுமன்பர்
கண்ணுங் கருத்து நிறைந்தாய்
   சகல கலாவல்லியே.
(6)

    704. பஞ்சை அப்பிய பாதம், இதந்தரு பாதம், செய்ய பாதம், பொற் பாதமென்க. பஞ்சு - செம்பஞ்சுக் குழம்பு. பங்கேருகம் - தாமரை. பாதபங்கேருகம் என் நெஞ்சமாகிய தடாகத்தில் மலராததற்குக் காரணம் யாது? நெடுந்தாட் கமலத்திலுள்ள. அஞ்சத்துவசம் உயர்த்தோன் - பிரமதேவன்; அஞ்சம் - அன்னப்பறவை. அகமும் - அவனுடைய மனத்திலும். தவிசு - ஆதனம்.

    705. பண்ணென்றது இங்கே இசைத்தமிழைக் குறித்து நின்றது. பரதமென்றது நாடகத் தமிழை. கல்வி - நூலறிவு. தீஞ்சொற் பனுவல் - இனிய சொல்லமைதியையுடைய கவி. முத்தமிழ்க் கல்வியும் கவித்துவமும் வேண்டுகின்றார். கந்தர் கலிவெண்பாவிலும் இவற்றை வேண்டினார். வேதத்தாற் கூறப்படும் பொருளும் ஐம்பூதங்களினூடே இருப்பவளும் அன்பர்கள் காட்சிக்கும் தியானத்திற்கும் எளிவந்தவளும் ஆவதைக் கூறியபடி.