பக்கம் எண் :

சகலகலாவல்லி மாலை519

706.
பாட்டும் பொருளும் பொருளாற்
    பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல்
    காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
    லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே
    சகல கலாவல்லியே.
(7)

707.
சொல்விற் பனமு மவதான
    முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள்
    வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால
    முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே
    சகல கலாவல்லியே.
(8)

    706. பாட்டு - செய்யுள். பொருள் - செய்யுளின் கருத்து. பயன் - அறம் பொருள் இன்பம் வீடென்பன. என்பாற் கூட்டும்படி - என்னிடத்திலே கூட்டும் வண்ணம். உளங்கொண்டு தீட்டும் தமிழ்: 702. பால் அமுதம் தெளிக்கும்வண்ணம் - பாலையும் நீரையும் தெளிவாக அறியும்வண்ணம்; அமுதம் - நீர். அன்னம் பாலையும் நீரையும் பிரிக்கும் வன்மையுடையதாதலின் இங்கே இங்ஙனம் உருவகம் செய்தார்; 324 : 5-8, பார்க்க.

707. சொல் விற்பனம் - நாவன்மை; வாக்குவியாக இருக்கும் தன்மை. அவதானம் - ஒரே சமயத்திற் பல விஷயங்களைக் கவனித்தல். கவி சொல்லவல்ல நல்வித்தை - கவித்துவம். ‘கல்வி சொல்லவல்ல நல்வித்தை’ என்ற பாடத்திற்கு மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லும் ஆற்றலென்று பொருள் கொள்க. “ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற், கெழுமையு மேமாப்புடைத்து” (குறள், 398) என்பவாதலின் அதனைச் சிதையாததென்றார். செல்வி - திருமகள். சிதையாமை நல்கும் - அழியாதபடி வழங்குகின்ற. கல்விப் பெருஞ்செல்வம்: “கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு, மாடல்ல மற்றை யவை” (குறள், 400).