பக்கம் எண் :

52குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

சமரிற் பொருதிரு மகனைத் தருமயில்
   தாலோ தாலேலோ
சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி
   தாலோ தாலேலோ.    
(8)

சந்த விருத்தம்
32.
முதுசொற் புலவர்தெ ளித்தப சுந்தமிழ்
   நூல்பாழ் போகாமே
முளரிக் கடவுள்ப டைத்தவ சுந்தரை
   கீழ்மே லாகாமே

அதிரப் பொருதுக லிப்பகை ஞன்றமிழ்
   நீர்நா டாளாமே
அகிலத் துயிர்கள யர்த்தும றங்கடை
   நீணீர் தோயாமே

சிதைவுற் றரசிய னற்றரு மங்குடி     
   போய்மாய் வாகாமே     
செழியர்க் கபயரு மொப்பென நின்றுண     
   ராதா ரோதாமே     

மதுரைப் பதிதழை யத்தழை யுங்கொடி 
   தாலோ தாலேலோ 
மலயத் துவசன்வ ளர்த்தப சுங்கிளி 
   தாலோ தாலேலோ.    
(9)

    (4) திருமகன் - உக்கிர குமாரபாண்டியர்.

    (முடிபு.) அமரர்க் கதிபதி உகைத்து அடும் அமரில் தலைவர்கள் பிகிட்டுடைவது கண்டு குளிர்ந்து, முடி தொலையவும் வரை திரியவும் வயிறு எரியவும் படை திரித்துப் பொரு திருமகன் என்க.

    32. (சந்தக்குழிப்பு.) தனனத் தனதன தத்தன தந்தன தானா தானானா.

    (அடி, 1) முதுசொற் புலவர் - தமிழ்ச் சங்கப் புலவர்கள். முளரிக் கடவுள் - பிரமதேவன். வசுந்தரை - பூமி.

    (2) (பி-ம்.) ‘பொருத’. தமிழ் நீர் நாடு - பாண்டியநாடு. அயர்த்தும் - மறந்தும். அறங்கடை நீள் நீர் - பாவச் செயலாகிய பெருங்கடலில்.

    (3) அரசியல் சிதைவுற்றுத் தருமம் மாய்வாகாமே. செழியர் - பாண்டியர். அபயர் - சோழர். (பி-ம்.) ‘ஒன்றுணராதார்.

    மதுரைப்பதி தழைவதனால் தமிழ்நூல் பாழ்போதல் முதலியன நிகழவில்லை; அதற்குக் காரணம் அம்பிகையின் அருளென்றபடி.