பக்கம் எண் :

மதுரை மீனாட்சியம்மை குறம்539

40.
கருமலையச் செருமலையுங் கைம்மலைய மன்னர்தொழ   
வருமலையத் துவசனருண் மடக்கொடியைப் பாடுவனே.

41.
விண்புரக்குங் கதிர்மௌலி முடிகவித்து வெண்குடைக்கீழ்   
மண்புரக்கு மபிடேக வல்லியைநான் பாடுவனே.

42.
வெம்புருவச் சிலைகுனித்து விழிக்கணைக ளிரண்டெந்தை
மொய்ம்புருவத் தொடுத்தெய்த மொய்குழலைப் பாடுவனே.

43.
ஊன்கொண்ட முடைத்தலையிற் பலிகொண்டார்க் குலகேழும்
தான்கொண்ட வரசாட்சி தந்தாளைப் பாடுவனே.

44.
வானவர்கோன் முடிசிதறி வடவரையிற் கயலெழுது
மீனவர்கோன் றனைப்பயந்த மெல்லியலைப் பாடுவனே.

45.
கான்மணக்குஞ் சடைக்காட்டிற் கவின்மணக்குங் கடிக்கொன்றைத்
தேன்மணக்கும் பிறைநாறுஞ் சீறடியைப் பாடுவனே.

46.
எவ்விடத்துந் தாமாகி யிருந்தவருக் கருந்தவரும்            
வெவ்விடத்தை யமுதாக்கும் விரைக்கொடியைப் பாடுவனே.

47.
வைத்தபகி ரண்டமெனு மணற்சிற்றி லிழைத்திழைத்தோர்     
பித்தனுடன் விளையாடும் பெய்வளையைப் பாடுவனே. 

48.
இலைக்குறியுங் குணமுநமக் கென்பார்க்கு வளைக்குறியும்     
முலைக்குறியு மணிந்திட்ட மொய்குழலைப் பாடுவனே. 

    40. கருமலைய - கருப்பம் கலங்க. கைம்மலைய மன்னர் - யானைகளையுடைய அரசர்.

    42. மொய்ம்பு உருவ - தோளை உருவிச் செல்ல.

    43. முடை - நாற்றம்.

    44. மீனவர் கோன் - உக்கிர குமார பாண்டியர்.

    45. கான் - நறுமணம். சிவபெருமான் உமாதேவியின் ஊடற் காலத்தில் அதனை நீக்கும்பொருட்டு வணங்குதலின் இறைவியின் சீறடி அவர் அணிந்த பிறை நாறியது.

    46. அருந்த அரும்.

    47. பித்தன் - சிவபிரான். “சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசைய” (குமர. 16) என்னும் செய்யுளைப் பார்க்க.

    48. குறி - பெயர்; உருவமுமாம். என்பார்க்கு - சிவபெருமானுக்கு.