கட்டளைக் கலித்துறை 4. | ஒருவல்லி யல்லிக் கமலத்து ளூறுபைந் தேறலொத்த | திருவல்லி தில்லைச் சிவகாம வல்லியென் சித்தத்துள்ளே | வருவல்லி செம்பொன் வடமேரு வில்லியை வாட்கணம்பாற் | பொருவல்லி பூத்தலி னன்றேயிப் பூமியைப் பூவென்பதே. | | | |
நேரிசை வெண்பா 5. | பூத்ததுவு மீரேழ் புவனமே யப்புவனம் | காத்ததுவு மம்மை கருணையே - கூத்தரவர் | பாடுகின்ற வேதமே பாராவிப் பாரொடுங்க | ஆடுகின்ற வேதமே யங்கு. | | | |
கட்டளைக் கலித்துறை 6. | அங்கைகொண் டேநின் னடிதைவந் தாரழ லாறமுடிக் | கங்கைகொண் டாட்டுநங் கண்ணுத லாரக் கனகவெற்பைச் | செங்கைகொண் டேகுழைத் தார்சிவ காமிநின் சித்திரமென் | கொங்கைகொண் டேகுழைத் தாயவர் பொற்புயக் குன்றெட்டுமே. | | | |
4. ஒரு வல்லி அல்லிக் கமலத்து - ஒற்றைக் கொடியிலே பூக்கும் அக விதழையுடைய தாமரையில்; என்றது இதய கமலத்தை. பைந்தேறல் - செவ்வித்தேன். பூத்தலின் - உண்டாக்கினமையால் சிவகாமியம்மை பூத்ததனாலேதான் பூமியைப் பூவென்பர்; பூ - மலர், பூமி.
5. பூத்ததுவும்: இதன்முன் நீ என்பதை வருவிக்க. புவனம் - உலகு. (பி-ம்.) “காத்ததுமென்”. அம்மை: முன்னிலைக் கண் வந்தது. பாரா - பார்த்து உணரா. ஆடுகின்ற ஏது - ஆடுதற்குக் காரணத்தை.
அம்மே, ஆடுகின்ற ஏதுவை வேதங்களே பாரா; பாரா: முற்று.
6. அழல் ஆற - நின்னுடைய சினம் ஆறும்படி. கங்கை கொண்டாட்டும் கண்ணுதலாரென்றது இறைவன் பணியும்போது கங்கையின் நீர் பாதத்தில் விழுவதைக் குறிப்பித்தது. முதலில் திருவடியைத் தைவந்தார்; அதனாற் கோபம்தணியாமை கண்டு வணங்கினா ரென்பது கருத்து; “முழுமணி மிடற்றன்..... விழுமணி யரவ நுழைசடா டவியின் விண்ணதித் தண்புனல் விடுப்ப, விரைவொடு குளிர்ந்து முகமலர்தலினால்” (பெரியநாயகியம்மை விருத்தம், 7) சித்திரம் - அலங்காரமாகிய.
இறைவர் ஒரு வெற்பையே குழைத்தார். நீ அவரது புயங்களாகிய எட்டு வெற்பையும் நின் மெல்லிய நகில்களைக் கொண்டு குழைத்தாய்.
|