பக்கம் எண் :

தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை543

நேரிசை வெண்பா
7.
குன்றஞ் சுமந்தொசிந்த கொம்பேநின் கோயிலும்பொன்
மன்றும் பணிந்தேம் வழிவந்தாற் - பொன்றாழ்
வரைசென்ற திண்டோண் மறலிக்கு நெய்தல்
முரைசன்றே வென்றி முரசு.

    கட்டளைக் கலித்துறை
8.
முருந்தடர்ந் தார முகிழ்த்தபுன் மூரன் முதல்விகயல்
பொருந்தடங் கண்விழிக் கும்புலி யூரர்பொன் மார்பின்மற்றுன்
பெருந்தடங் கொங்கை குறியிட்ட வாகண்டப் பிஞ்ஞகர்க்குன்
கருந்தடங் கண்ணுங் குறியிட்ட போலுங் கறைக்கண்டமே.

நேரிசை வெண்பா
9.
கறைகொண்டு நச்சரவக் கச்சணிந்தா ரென்று
மறைகொண்டு வாழ்த்துவதும் வம்பே - இறைகொண்
டயிலிருக்கு முத்தலைவே லண்ணலுக்கென் னேயோர்
மயிலிருக்கத் தில்லை வனத்து.

    7. குன்றமென்றது நகில்களை. வழி வந்தால் - நின் அடியவரான எம்முடைய வழியில் வந்தால். வரை சென்ற - மலையை யொத்த, மறலிக்கு - யமனுக்கு. பிறரை வெற்றி கொண்ட யமனுடைய முரசு அவனுக்கு நெய்தல் முரசாகு மென்றபடி: நெய்தல் முரசு - சாப்பறை. எம்பால் வந்தால் அவனுக்கு இறுதி நேருமென்பது கருத்து.

    8. முருந்து - மயிலிறகின் அடிக்குருத்து. ஆரம் முகிழ்த்த - முத்துப்போல்தோன்றிய. கயல் கண்களைப்போலத் தோற்றுதற்கு இடமான புலியூர்; புலியூர்க்கு அடை.

    நினது கொங்கைகள் சிவபெருமான் மார்பிற் குறியிட்டது கண்டு நின் விழிகள் இறைவர் கழுத்திற் குறியிட்டது போன்றது கழுத்திலுள்ள கறை; கறை - விடத்தினாலுண்டாகிய கறுப்பு.

    9. மறைகள் நச்சரவக் கச்சணிந்தா ரென்பது வம்பு; மயிலிருக்கும் போது பாம்புகள் இரா என்றபடி; இக்கருத்தின் விரிவு, “கரும்புற்ற செந்நெல் “ (குமர. 342) என்னும் செய்யுளிற் காணப்படுகின்றது.

    கறை கொண்டு - விடத்தை உணவாகக் கொண்டு. இறை - தங்குதல். தில்லைவனத்து மயிலிருக்க அண்ணலுக்கு என்னே; மயில் - சிவகாம சுந்தரி. ஒரு மயில் பக்கத்தே இருக்கும்போது பாம்பினாலும் அதன் விடத்தாலும் சிறிதும் தீங்கு உண்டாகாதென்றபடி.