பக்கம் எண் :

544குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

    கட்டளைக் கலித்துறை
10.
வன்னஞ் செறிவளைக் கைச்சிற காற்றன் வயிற்றினுள்வைத்
தின்னஞ் சராசர வீர்ங்குஞ் சணைத்திரை தேர்ந்தருத்திப்
பொன்னம் பலத்துளொ ரானந்த வாரிபுக் காடும்பச்சை
அன்னம் பயந்தன கொல்லாம்பல்லாயிர வண்டமுமே.

நேரிசை வெண்பா
11.
அண்டந் திருமேனி யம்பலத்தார்க் கென்பதுரை
கொண்டங் குணர்தல் குறைபாடே - கண்டளவில்
விண்ணம் பொலிந்ததொரு மின்கொடியே சொல்லாதோ
வண்ணம் பொலிந்திருந்த வா.

கட்டளைக் கலித்துறை
12.
வாய்ந்தது நின்மனை வாழ்க்கையென் றேதில்லை வாணரம்மே
காய்ந்தது வென்றிவிற் காமனை யேமுடிக் கங்கையைப்பின்
வேய்ந்தது பாவநின் மென்பதந் தாக்கவவ் வெண்மதியும்
தேய்ந்தது பெண்மதி யென்படு மோவச் சிறுநுதற்கே.

நேரிசை வெண்பா
13.
சிறைசெய்த தூநீர்த் திருத்தில்லைத் தொல்லை
மறைசெய்த வீர்ந்தண் மழலைப் - பிறைசெய்த
ஒண்ணுதலைக் கண்ணுதலோ டுள்ளத் திருத்தியின்பம்
நண்ணுதலைக் கண்ணுதலே நன்று.

    10.ஆனந்தவாரி - ஆனந்தக்கடல். அம்பிகையை அன்னப் பறவையாக உருவகஞ் செய்தார். வளையையுடைய கைகளாகிய சிறகால். சராசரமாகிய குஞ்சு, ஈர்ங் குஞ்சு - பச்சைக்குஞ்சு. அண்டம் - உலகம், முட்டை: சிலேடை.

    11. சிவபெருமானுக்கு ஆகாயம் திருமேனியென்று வாயினாற் கூறுதல் குறைபாடுடையது; வானத்தில் தோன்றும் மின் கொடியே இறைவனது திருவுருவத்தை நினைவுறுத்தும். வானத்தை அவர் திருமேனியாகவும் அதன்கண் தோன்றும் மின்னலை உமாதேவியாராகவும் நினைந்து இங்ஙனம் கூறினார்.

    12. நின் மனை வாழ்க்கை வாய்ந்தது என்ற தைரியத்தால் காமனைக் காய்ந்தார். சிறுநுதற்குப் பெண்மதி என்படுமோ; சிறு நுதற்கு - கங்கைக்கு; பெண்மதி என்படுமோ; முடித்த பிறை தேய்ந்தது போலக் கங்கையின் மதியும் தேயுமென்றபடி.

    13. சிறைசெய்த நீர்த்தில்லை; “சிறைவான் புனற்றில்லை” (திருச்சிற்.); சிறை - அணை. மறையையுண்டாக்கிய. ஒண்ணுதல் - சிவகாமவல்லி. கண்ணுதலோடு - நடராசப் பெருமானோடு. கண்ணுதலே நன்று - நினைத்தலே நன்மையாகும்.