நேரிசை வெண்பா 17. | இன்றளிர்க்கைக் கிள்ளைக்கே யீர்ங்குதல் கற்பிக்கும் | பொன்றளிர்த்த காமர் பொலங்கொம்பு - மன்றவர்தம் | பாகத் திருந்தாள் பதுமத்தாள் பாவித்தாள் | ஆகத் திருந்தா ளவள். | | | |
கட்டளைக் கலித்துறை 18. | அல்லிக் கமலத் துணைத்தாள தென்றுமென் னாவிக்குள்ளே | புல்லிக் கிடந்தது போலுங்கெட் டேன்புன் மலக்கிழங்கைக் | கல்லிப் புலக்களை கட்டருள் பூத்துட் கனிந்தமலை | வல்லிக் கிலைகொன் மருங்கென் றிரங்கு மறைச்சிலம்பே. | | | |
நேரிசை வெண்பா 19. | மறைநாறுஞ் செவ்வாய் மடக்கிள்ளாய் பிள்ளைப் | பிறைநாறுஞ் சீறடியெம் பேதாய் - நறைநாறும் | நாட்கமலஞ் சூடே நறுந்துழாய் தேடேநின் | தாட்கமலஞ் சூடத் தரின். | | | |
17. தளிர்போன்ற கையிலுள்ள கிள்ளைக்கு. பொலங்கொம்பு - சிவகாமியம்மை. பாகத்திருந்தாளைப் பதுமத்தாளாகிய அவள் பாவித்தாளாகித் திருமாலின் ஆகத்து இருந்தாள். திருமாலென்னும் சொல்லை வருவிக்க. அவளென்பதை நெஞ்சறி சுட்டாக்கித் திருமகளெனப் பொருள்கொண்டு, பாகத்திருந்தாளது பதுமம் போன்ற தாள்களைப் பாவித்தாளாகித் திருமாலின் ஆகத்திருந்தாளென்று பொருள் கொள்ளலும் பொருந்தும்; ஆகம் - உடம்பு, மார்பு: சிலேடை.
18. அல்லி - அகவிதழ். கல்லி - தோண்டி. கட்டு - களையெடுத்து. மருங்கு - இடை. ஒலிக்கும் மறையாகிய சிலம்புகள் சிவகாமவல்லியினுடைய தாள்களிலேயிருந்து என் ஆவிக்குள்ளே என்றும் பொருந்தின போலும். என் ஆவிக்குள் அத்தாள்கள் பொருந்த அவற்றோடு சிலம்புகளும் பொருந்தின போலுமென்றார்; ஆவி - உயிர், தடாகம்; சிலேடை.
19. நின் திருவடித் தாமரைகள் கிடைக்கப்பெற்றால் பிரம பதவியையும் திருமால் பதவியையும் விரும்பேமென்றபடி. மறை நாறுஞ் செவ்வாய்: “மறைசெய்த வீர்ந்தண் மழலை” (13).
|