முகவுரை13

    பிரபந்தங்களைப் படிப்பாரும், பாராட்டுவாரும் அருகிவரும் இக்காலத்தில், அவற்றின் அருமையைப் பலரும் அறிய வேண்டுமென்று எண்ணியும் ஸ்ரீ காசி மடாலயத்து அதிபர்கள் விருப்பத்தையுணர்ந்தும் ஆராய்ச்சி விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. அதனால் குமரகுருபரருடைய தமிழ்ப் புலமையின் விரிவையும் உலகியலறிவையும் சமயவுணர்ச்சியையும் தெய்வ பக்தியையும் பிற சிறப்பியல்புகளையும் அறியலாம்.

    குமரகுருபர சுவாமிகளுடைய சரித்திரம் ஸ்ரீ காசிமடத்தின் ஆதரவில் பின்பு விரிவாக வரக்கூடுமாதலின் இதிற் சுருக்கமாக எழுதிச் சேர்க்கப்பெற்றது.

    இப்பதிப்பில் பிரபந்தச் செய்யுட்கள் அனைத்திற்கும் தொடர்ச்சியான எண் கொடுக்கப்பட்டுள்ளது. வழங்கிவரும் அச்சுப் பிரதிகளிற் செய்யுட்களின் தலைப்பிற் காணப்படும் யாப்புக் குறிப்புக்கள் சில பிழைபடவுள்ளன; அவை இப்பதிப்பில் மாற்றப்பட்டன. சந்தச் செய்யுட்களுக்குரிய குழிப்புகளை அடிக்குறிப்பிலே காணலாம். பல ஏட்டுச்சுவடிகளின் உதவியால் அறிந்த பல திருத்தங்களுள் பொருத்தமானவற்றை மூலத்திலேயமைத்தும், பிறவற்றையும் இப்பொழுது அச்சுப் பிரதிகளிலே காணப்படும் சில வேறுபாடுகளையும் பிரதிபேதங்களாக அடிக்குறிப்பிலே கொடுத்தும் இருக்கிறேன்.

    குறிப்புரையில் கடினமான சொற்களுக்குப் பொருளும் முடிபும் சில கருத்துக்களுக்குப் பிற புலவர் வாக்கிலிருந்து மேற்கோளும் காட்டப்பட்டன. பிள்ளையவர்கள் முதலியோரிடத்துக் கேட்ட பல அரிய உரைக்குறிப்புகளையும் இப்போதுள்ள ஸ்ரீ காசி மடாலயத் தலைவர்கள் ஆராய்ந்தும் கேட்டறிந்தும் உதவிய குறிப்புக்களையும் இக் குறிப்புரையில் உபயோகப்படுத்தியுள்ளேன்.

இப்பதிப்புக்கு உதவியாக இருந்த ஏட்டுச் சுவடிகள் வருமாறு;

பிரபந்தத் தொகுதி முழுதும் உள்ளவை

    1. திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்துப் பிரதி,

    2. திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்துப் பிரதி,

    3. ஸ்ரீ சி. தியாகராச செட்டியாரவர்கள் பிரதி.