முதல்வராகத் தேர்ச்சி பெறுபவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசாக அளிக்கும்படி நிலையான ஏற்பாடொன்றை இவர்கள் செய்து பெரும்புகழைப் பெற்று விளங்குவது தமிழ்நாட்டார் பலரும் அறிந்ததே. இத்தகைய பேருதவியை இதுவரையில் ஒருவரும் செய்யவில்லை. இப்பரிசு அளிக்கத் தொடங்கியபின் வித்துவான் பரீட்சைக்குப் படிப்பவர்களுடைய தொகை அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
வழக்கம்போலவே இப்பதிப்பு விஷயத்தில் உடனிருந்து பல வகையான உதவிகளைச் செய்தவர்கள் என் இளைய சகோதர்ராகிய சிரஞ்சீவி வே. சுந்தரேசையரும், மேற்கூறிய வித்துவான் சிரஞ்சீவி வி. மு. சுப்பிரமணிய ஐயரும், ஸ்ரீ காசி மடத்து ஆயிரம் ரூபாய்த் தமிழ்ப் பரிசை 1933-ஆம் வருஷம் அடைந்தவரும் சென்னைக் கலைமகள் துணையாசிரியருமான வித்துவான் சிரஞ்சீவி கி. வா. ஜகந்நாதையரும் ஆவர்.
இளமைமுதல் தமிழ்த்தொண்டிலே பொழுதுபோக்கி வரும் எனக்குச் சில வருஷங்களாக உள்ள முதுமைத்தளர்ச்சியால் நான் எண்ணியவற்றை எண்ணியபடியே என்னாற் செய்ய இயலவில்லை. ஆயினும். சுவையுள்ள தமிழ் நூல்கள் வெளிவர வேண்டுமென்னும் ஆவல்மட்டும் இருந்து வருகிறது. இந்நிலைமையில், இப்பதிப்பு விஷயத்தில் என் கருத்தையும் குறிப்பையும் தெரிந்து உதவிபுரிந்தவர் மேற்கூறிய ஜகந்நாதையர். அவருடைய பேருழைப்பே இப்பதிப்பிலுள்ள ஆராய்ச்சியும் குறிப்புரையும் இம் முறையில் அமைந்திருப்பதற்குக் காரணமென்பதை இதன் முகமாகத் தமிழன்பர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
“தியாகராஜ விலாசம்” இங்ஙனம், திருவேட்டீசுவரன் பேட்டை, வே. சாமிநாதையர். 16-9-1939.
|