தனிச் செய்யுட்கள்17

உறைகளிறே யுன்பாத முன்னினேன் கண்டாய்
இறைகளிறேன் கூற்றுக் கினி.
(1)
கற்றறிவ தென்றுங் கனவினுமுன் னாமமே
மற்றறியேன் வள்ளி மணவாளா-வெற்றிச்
செழுந்திருக்கை வேலைச் சிறுகாலை வாழ்த்தி
எழுந்திருக்கை வேலை யெனக்கு.
(2)
இவையிரண்டும் திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயரவர்கள் வீட்டிற் கிடைத்த மதுரைக் கலம்பக ஏட்டுப் பிரதியிலே
இருந்தன.
(வஞ்சித்துறை)
ஆறு முகவனை, நாறு மலர்கொடு
கூறு மடியவர், பேறு பெறுவரே.
(1)
(குறள் வெண்செந்துறை)
தவளத் தாமரைத் தாதார் கோயி
லவளைப் போற்றுது மருந்தமிழ் குறித்தே.
(2)
(எழுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்)
பவளமால் வரையி னிலவெறிப் பதுபோற்
பரந்தநீற் றழகுபச் சுடம்பிற்
றிவளமா துடனின் றாடிய பரமன்
சிறுவனைப் பாரதப் பெரும்போர்
தவளமா மருப்பொன் றொடித்தொரு கரத்திற்
றரித்துயர் கிரிப்புறத் தெழுதும்
கவளமால் களிற்றின் றிருமுகம் படைத்த
கடவுளை நினைந்துகை தொழுவாம்.*
(3)
(கலிவிருத்தம்)
ஆர ணத்தவன் மாலறி யாவருட்
பூர ணத்திரு ஞானம் பொலிந்திடக்
கார ணத்துமை யாள்தரு கைம்முக
வார ணத்திரு பாதம் வணங்குவாம்.
(4)
இவை நான்கும் கொங்குநாட்டிற் கிடைத்த மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ஏட்டுப் பிரதிகள் சிலவற்றில் இருந்தன.

 
 * 
திருவாதவூரடிகள் புராணம், கடவுள் வாழ்த்து.