20குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கேட்டு மகிழ்ந்தனரென்றும், குமரகுருபரர் முத்தப்பருவத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கையில் தம் திருக்கழுத்திலிருந்த முத்துமாலை யொன்றை எடுத்து இவருக்கு அணிவித்துவிட்டு மறைந்தனரென்றும் கூறுவர். அந்தப் பிள்ளைத்தமிழைக் கேட்டு மனமுவந்த திருமலை நாயக்கர் குமரகுருபரருக்குப் பலவகையான ஸம்மானங்களை அளித்து வழிபட்டனர். குமரகுருபர்ர் பின்னும் சில காலம் மதுரையிலே தங்கி மதுரைக் கலம்பகமென்னும் பிரபந்தத்தை இயற்றினர். பிறகு சோழ நாட்டு ஸ்தலங்களைத் தரிசிக்கத் தொடங்கித் திருவாரூருக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ தியாகப்பெருமானைத் தரிசித்துக் கொண்டு சிலகாலம் இருந்தனர். அக்காலத்தில் திருவாரூர் நான்மணிமாலையென்னும் பிரபந்தத்தை இவர் இயற்றினார்.

    சிவஞான வுபதேசம் பெறவேண்டுமென்ற கருத்து இவருக்கு வரவர அதிகமாயிற்று. தமக்குரிய ஞானாசிரியரைத் தேடித் தேர்ந்து சரண்புகவேண்டுமென்று இவர் மனம் ஆவலுற்று நின்றது. அக்காலத்தில் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்தில் 4-ஆம் பட்டத்தில் குருமூர்த்தியாக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி தேசிகர் சிவஞானச் செல்வராக இருப்பதையறிந்து அவரிடம் சென்றார். அங்கே உண்டான சில குறிப்புக்களால் அப்பெரியாரே தமக்குரிய ஆசிரியரென்பதை இவர் தேர்ந்தனர். அப்பால் தமக்கு துறவுநிலையருள வேண்டுமென்று அத்தேசிகர்பால் குமரகுருபரர் வேண்டினர். அங்ஙனம் செய்வதற்குமுன் ஸ்தலயாத்திரை செய்து வரும்படி பணித்தல் அவ்வாதீன மரபாதலின் அப்பெரியார் காசியாத்திரை செய்து வரும்படி கட்டளையிட்டனர். காசிக்குச் சென்று வருவதில் நெடுங்காலம் செல்லுமேயென்று கவன்ற குமரகுருபரரை நோக்கிச் சிலகாலம் சிதம்பரவாசமேனும் செய்யும்படி பணித்தனர்.

    ஞானாசிரியர் கட்டளைப்படியே சிதம்பரத்துக்கு இவர் பிரயாணமாகி இடையே ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயிலில் தங்கித் தரிசனம் செய்துகொண்டு அங்கே கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி விஷயமாக ஒரு பிள்ளைத் தமிழ் இயற்றினார். பிறகு சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராசப்பெருமானைத் தரிசனம் செய்துகொண்டு சிலகாலம் தங்கினர். அக்காலத்தில் சிதம்பர மும்மணிக்கோவையென்னும் பிரபந்தம் இவரால் இயற்றப்பெற்றது.