24ஆராய்ச்சி

ஆராய்ச்சி

முன்னுரை

    ஸ்ரீ குமரகுருபர சுவாமிகளுடைய செய்யுட்களில் தனிச் சிறப்புப் பெற்று விளங்குவது அவற்றின் இன்னோசையேயாகும். ஏனைப் பாட்டுக்களிலிருந்து இவருடைய செய்யுட்களைச் செவிப்புலன்கொண்டே வேறுபடுத்திவிடலாம். இவற்றைக் கேட்கும்போது நமக்குத் தென்பாண்டி நாட்டுப் பொருநை நதியின் ஓட்டம் ஞாபகத்துக்கு வருகின்றது. சொற்களும் சொற்றொடர்களும் ஒன்றனோடு ஒன்று செவிக்கினிமைதரும் வண்ணம் பொருந்தி அமைந்துள்ளன. பொருளிரே கருத்துச் செல்வதற்கு முன் செய்யுட்களின் ஓசை நம் கருத்தை இழுக்கின்றது.

    சொல்லின்பத்தை விளைவிப்பனவாகிய கருவிகள் அனைத்தும் கம்பீரமாகச் செல்லும் இவருடைய செய்யுள் நடையில் நன்கு அமைந்துள்ளன. எவ்வகை யாப்பையும் பேராற்றலுடம் அமைக்கும் இம்முனிவருக்குச் சொற்களும் தொடை நயங்களும் சிறிதும் முயற்சியின்றி இயல்பாகவே வந்து அமைகின்றன. வழியெதுகையும் முரண்டொடையும் அச்செய்யுட்களின் ஓசையைப் பொலிவுறுத்துகின்றன. சந்தத்தை இவர் மிக எளிதின் அமைத்துள்ளார்.

    விருத்தங்களிலும் வெண்பாவிலும் இவருக்கே உரிய ஓசை நயம் மேம்பட்டு விளங்குகின்றது. அகவல்களிலும் வேறு செய்யுட்களிலும் இவருடைய கருத்துக்கள் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளன.

தமிழன்பு

    தமிழில் இவருக்கு இருந்த அன்பு அளவிடற்கரியது. இறைவன்பால் அன்பையும், அன்பர் தொடர்பையும், துறவுள்ளத்தையும் வேண்டும் இவ்வாசிரியர் உலகியற் பொருள்களில் எதனையும் விரும்பவில்லை. ஆயினும், சொற்விற்பனமும் கவி சொல்லவல்ல நல்வித்தையும் வேண்டுமென்ற வேட்கை மாத்திரம் இவரை விடவில்லை.