(கண்ணிகள் 118-9)
என்று இளமையில் முருகக் கடவுளை வேண்டும் வேண்டுகோளிலும், துறவுபூண்டபின் பாடிய சகலகலாவல்லி மாலையில்,
| “நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் |
| பாடும் பணியிற் பணித்தருள்வாய்” |
| “பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் |
| எண்ணும் பொழுதெளி தெய்தநல் காய்” |
| “பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் |
| கூட்டும் படிநின் கடைக்கணல் காய்” |
| “சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல |
| நல்வித்தை யுந்தந் தடிமை கொள்வாய்” |
என்று கலைமகளை வேண்டும பிரார்த்தனையிலும் இக்கருத்து வெளிப்படுகின்றது.
தெய்வத்தன்மையையும், சிவபெருமான் முதலியவர்களால் விரும்பப்பெறும் இயல்பையும் தமிழ்மொழி உடையதென்பதை இவர் அறிந்தவர். அன்றியும் இறைவன் திருவடிக்குப் புரியும் தொண்டுகளிற் சொன்மாலை சூட்டுதலும் ஒன்றென்பதையும் உணர்ந்தவர். வாடும் மலர்மாலையிலும் வாடாத பாமாலையே இறைவனுக்கு மிகவும் விருப்பமானதென்று இவர் கூறுகின்றார்;
| “ஒண்மலர் சொன்மலர்க் கொவ்வாது போலும்” |
(338)
ஆதலின் அத்தமிழறிவைப் பெற்று அவ்வாற்றலினால் ஆசிரியரையும் தெய்வங்களையும் பாராட்டிப் பாடித் திருப்தியுற்றவர் இவர். பண்டார மும்மணிக்கோவையில்,
| “விரிக்குஞ் சரியையிப் பாமாலை சேர்த்தது........ பாலித்ததே” |
(599)
என்னும் செய்யுளால் தாம் தமிழ்மாலை சாத்தியது முதலியவற்றைச் சரியை முதலியனவாகவே கருதினரென்பது தெளிவாகின்றது. இவ்வாறு கவிதை பாடி இறைவன் திருவருள் பெறுதல் எளிதென்பது இவருடைய கொள்கை.
| “எங் கவிதைகொண் டாட்கொண்ட காசிநாதர்” |
என்னும் காசிக் கலம்பகச் செய்யுளில், அன்பினால் மனமுருகி இயற்றும் கவிதை