தமிழின் வடித்திடு நவரசமே” (439) என்றும் பாராட்டுவர். திருமாலைப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலென்பர். கலைமகளை “மதுரமொழுகுங் கொழிதமிழ்ப் பனுவற்றுறைப்படியும் மடநடைக் கூந்தலம்பிடி” (55) என உருவகம் செய்வர். சிவபெருமான் சுந்தரேசராகவும் அம்மை தடாதகைப் பிராட்டியாராகவும் முருகக்கடவுள் உக்கிரகுமாரராகவும் அவதரித்ததற்குக் காரணம் அம்மூவருக்கும் தமிழினிடத்துள்ள வேட்கையே என்று கூறுவர் (196).
இவருடைய தமிழன்பு தமிழை எல்லை கடந்த நிலையிலும் அமைத்துவிடுகின்றது. இவருடைய தமிழ்ச் செய்யுளில் வரும் காசியில் கொற்றியார் காசிவளமையெல்லாம் கொழுத்த தமிழாற் பாடியாடுகின்றார் (620). வண்டுகூடத் தாமரையிலிருந்து தமிழ்ப்பாட்டை இசைக்கின்றது (352).
தமிழின் சிறப்பைப் புலப்படுத்த இவர் அங்கங்கே அமைத்துள்ள தொடர்மொழிகள் வருமாறு;-
அருந்தமிழ் (344), இசை முத்தமிழ் (163),கலைத் தமிழ்த் தீம்பாலமுதம் (706), கொத்து முத்தமிழ் (350), கொழித்தெடுத்துத் தெள்ளித் தெளிக்குந்தமிழ் (10), கொழிதமிழ் (196, 349, 385), கொழுத்த தமிழ் (620), சங்கத் தமிழ் (157, 174, 375-7), செழுந் தமிழ்ச் செல்வம் (703), செழுந்தமிழ்த் தெள்ளமுது 9702), சொற் சுவைபழுத்த தொகைத்தமிழ் (584), தண்டமிழ் (196, 634), தருசுவை யமுதெழ மதுரம தொழுகு பசுந்தமிழ் (115), தலைச்சங்கம் பொங்கும் பண்முத்தமிழ். (149), தீஞ்சுவைக்கனியுந் தண்டேனறையும் வடித்தெடுத்த சாரங்கனிந்தூற்றிருந்த பசுந்தமிழ் (393), துறைத்தமிழ் (88), தெள்ளு தமிழ் (448), தெளிதமிழ் (22, 196), தென்னந்தமிழ் (24), தேக்கமழ் மதுர மொழுகிய தமிழ் (4), பண்ணுலாம் வடிதமிழ் (15), புத்தமுதம் வழிந்தொழுகும் தீந்தமிழ் (105), பைந்தமிழ் (158, 472), மதுரித்து வட்டெழு முத்தமிழ் (5), முத்தமிழ் (176, 378, 435), முதுசொற்புலவர் தெளித்த பசுந்தமிழ் (32), முதுதமிழுததி (53), மும்மைத்தமிழ் (69, 127, 140, 390-4), வண்டமிழ் (212), வண்டமிழ்க்கடல் (191), விரைந்தேன் பில்குந் தேத்தமிழ் (699).
தெய்வங்களால் விரும்பப் பெறும் தமிழினிடத்தே அன்பு செறிந்த இவ்வாசிரியர் தம்மைப் போன்ற புலவர்களையும் தாம் சென்ற நெறியே செல்லப் பணிக்கின்றார்;
|