(699).
தமிழின் நலமுணர்ந்து தமிழ்மாலை புனைந்து உவக்கும் குமரகுருபரர் வடமொழிக்கு உரிய நன்மதிப்பையும் அங்கங்கே வெளிப்படுத்துவதில் தவறவில்லை. சிறப்பாக வேதங்களப் பலவாறு இவர் பாராட்டிச் செல்கின்றார். அவற்றின் பழமையும் தெய்வத் தன்மையும் இன்னிசையும் எழுதாக்கிளவியாதலும் சிவபெருமானுக்குக் குதிரையாதலும் சிலம்பாதலும் அப்பெருமானது திருவாக்காதலும் பல சாகைகளையுடைமையும் பிரமனாற் பாராயணம் செய்யப்பெறுவதும் சொல்லப்பதுகின்றன. சில இடங்களில் மறைகளின் பழமைப் பண்பும் தமிழின் புதுமைக் கவினும் ஒருங்கே புகழப் பெறுகின்றன.
மீனாட்சியம்மையைத் தொடுக்குங் கடவுட் பழம் பாடற்றொடையின் பயனாக்க் கூறியவர் தொடர்ந்து, நறைபழுத்த துறைத் தீந்தமிழி னொழுகுநறுஞ்சுவையாகவும் உரைத்தார் (62); சோமசுந்தரக் கடவுளை,
| “பொழிந்தொழுகு முதுமறையின் சுவைகண்டும் புத்தமுதம் |
| வழிந்தொழுகுந் தீந்தமிழின் மழலைசெவிமடுத்தனையே” |
(105)
என்று பாராட்டுவர். முருகக்கடவுள் திருவாயை, கடவுண் மறையும் தமிழும் மணக்கும் வாய் (393) என்பர், கலைமகளை,
| “துறைத்தமிழொடுந் தொன்மறை தெளிக்குங் கலைக்கொடி” |
(88)
| “வடநூற் கடலும், தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர் |
| செந் நாவினின்று காக்குங் கருணைக் கடல்” |
(703)
என்று துதிப்பர்.
ஓரிடத்தில் கலைமகள் ‘முதுபாடல் எழுதா மறையோடும் இசை முத்தமிழ் பாடுவதாகக்’ கற்பிக்கின்றார். (163). தம்முடைய ஆசிரியராகிய மாசிலாமணி தேசிகரை ‘நான்மறைக் கிழவ’ என்று சிறப்பித்தவர், தொகைத் தமிழ் கவிஞ (584) என்றும் பாராட்டுவர்.