ஆராய்ச்சி29

தமிழ்ப் புலமை
எழுத்துச் சொல்லிலக்கணச் செய்திகள்

    தமிழின்பால் அன்பும் மற்றக் கலைகளில் விருப்பமும் உடைய இம்முனிவர் ‘எழுத்துமுதலா மைந்திலக்கணமுந் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை’ யையுடையவர். தொல்காப்பிய முதலிய இலக்கண நூல்களில் இவர் பயிற்சி யுடையவரென்பதற்கு அறிகுறியாக இவர் செய்யுட்களிற் பல குறிப்புக்கள் காணப்படுகின்றன. இவர் காலத்தில் நன்னூல் தமிழ் கற்பவராற் பெரிதும் பயிலப்பெற்று வந்தது. இவருடைய செய்யுட்களில் அவ்விலக்கண நூலிலிருந்து சில செய்திகளை மேற்கோள் காட்டுகின்றனர்:

“தன்னுடை யாற்றன் முன்னார் முன்னர்த்
 தற்புகழ் கிளவியுந் தகும்”
(336)
என்பது நன்னூற் பாயிரத்தில் வரும்,
“தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும்
 தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோர்க்கே”
என்னும் சூத்திரத்தைப் பெயர்த்தமைத்ததே யாகும்;
“தொகுதியுள் வேற்றுமைத் தொகைப்பொருள் கொளினும்”
(578)
என்பதில் வேற்றுமைத்தொகை என்பதை எடுத்தாண்டுள்ளார்;
“ஒருவ ரென்ப துயரிரு பாற்றாய்ப்
 பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப”
என்னும் சூத்திரத்தை அர்த்தநாரீசுவரத் திருவுருவ சம்பந்தமான கற்பனை ஒன்றிற் பொருத்தியுள்ளார் (534).
    பண்டார மும்மணிக்கோவையில் ஞானாசிரியருடைய திருவருட் சிறப்பைப் பலவகையிலமைத்துப் பாராட்டுமிடத்து, “நின் திருவருளால் என்னுடைய கரணங்கள் சிவகரணங்களாயின. பிறர் திறத்துத் திரிகரணங்கள் என்னும் தொடர், மூன்று கரணங்களென்னும் ஒரே பொருளுடையதாக வழங்கப்பெறும். என் திறத்திலோ மூன்று கரணங்கள், சிவகரணங்களாகத் திரிந்த கரணங்கள் என இரண்டு பொருள்படும் தொடராக அது நிற்கின்றது” (587) என்கின்றார். இங்கே ஒரு பொருட் கிளவி, இரு பொருட் கிளவி என்னும் கிளவிப் பெயர் வகைகளை ஆண்டுள்ளார்;