ஆராய்ச்சி31

“மென்பான் மருதத் தண்புனற் கமலை”
(324)
என்பதில் திருவாரூர் மருத நிலத்திலுள்ள தலமென்று கூறுவர். ஐந்து நிலங்களுக்குள்ளும் மருதமும் நெய்தலும் மென்பாலெனப்படும். அதனை யுணர்ந்த இவ்வாசிரியர் ‘மென்பான் மருதம்’ என்றார். பின்னும்,
“இறும்பூது பயக்கு நறும்பணை மருதத் தந்த ணாரூர்”
(312)
“பூம்பணை மருதத் தீம்புனற் கமலை”
(348)
“மன்றலம் பணைசூழ் மருத வேலிப்
 பொன்மதிற் கமலை நன்னகர்”
(593)
என அத் திருவாரூரைச் சிறப்பிப்பர்.
சோழநாட்டில் மருத நிலங்களே பெரும்பாலும் அமைந்தமையைக் கருதி,

“மருதக் கோமகன் குடிகொண்ட சோணாட”
(445)
என்று முத்துக்குமாரசுவாமியை விளிப்பர்.
தில்லையம்பதியை,
“கொண்டல்கண் படுக்குந் தண்டலை வளைஇத்
 தடம்பணை யுடுத்த மருத வைப்பின்”
(478)
இருப்பதென்பர்.
“மருதம்வீற் றிருந்து பெருவளஞ் சுரக்கும்
 தருமையம் பதி”
(569)
என்பதனால் தருமபுரமும்,
“இறும்பூது பயக்கு நறும்பணை மருதக்
 கன்னிமதி லுடுத்த காசிமா நகரம்”
(656)
என்பதனாற் காசியும் மருத நிலத்தில் இருப்பதைப் புலப்படுத்துகின்றார்.
ஒரு நிலத்துக் கருப்பொருளும் மற்றொரு நிலத்துக் கருப்பொருளும் மயங்கிக் காணப்படுதல் உலக இயற்கை. இதனைத் திணைமயக்க மென்று புலவர் கூறுவர். சான்றோர் செய்யுட்களிலும் பிற்காலத்துக் காப்பியங்களிலும் திணைமயக்க வருணனைகள் காணப்பெறும். இவ்வாசிரியர் நெய்தலும் மருதமும் தம்முள் மயங்கியிருப்பதைப் பின்வருமாறு தெரிவிப்பர்;

    “முள்ளைப் புறத்தேகொண்ட நீண்ட இலையை யுடைய தாழையானது தனது வெள்ளிய மடலிலே சுழித்த முகத்தையுடைய சங்கையும் அதனால் ஈனப்பட்ட முத்தையும் தாங்கி நிற்