42குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

“குருகுமெய்ந் நாணும் விட்டாள்”
(183),
“கைவளையுந் துறந்தாள்”
(692)
“சரியோ டொழுகுங் கரவளையே”
(696)
என்பவற்றிற் புலப்படுத்தப் பெறுகின்றது,
    தலைவி இரவும் பகலும் துயிலாமல் இருத்தல் கண்டுயின் மறுத்தலென்னும்மெய்ப்பாட்டின்பாற் படும்;

“உறக்க மில்லையால்”
(129)
“துயிலா ளின்னமுமே”
(163)
“கண்க ளுறங்கா”
(696)
என இந்நிலை கூறப்பெறுதல் காண்க
    தலைவி தன் நிலையைத் தலைவனுக்குத் தெரிவிக்க விரும்புதலும் பாங்கியரையும் பிறபொருள்களையும் தூதுவிடுதலும் மரபு. அவள் கருத்தையறிந்து தோழி தூதுவிடுவதாகவும் சில செய்யுட்கள் இதில் அமைந்துள்ளன. இதனைத் தூது முனிவின்மை யென்னும் மெய்ப்பாடாக உரைப்பர். இச்செய்யுட்களில் பாங்கியும், அன்னம், கிளி, பறவைகள், மேகம், வண்டு என்பவையும் தூதுப்பொருள்களாக வருதலைக் காணலாம்.

    தலைவி வருந்தி அழுதலை நினைந்து கூறும் சில செய்திகள் கற்பனைத் திறம் பெற அமைந்துள்ளன. அவள் அழுங்கண்ணீர் பெரு வெள்ளமாகிச் சென்று கடலில் விழுந்து அதன் நீரையே உப்பாக்கியதென்றும் (611), அஞ்சனத்தைக் கரைத்தோடுங் கண்ணீர் தேங்கித் தன் நிறத்தாற் கருங்கடலைப் போலத் தோற்றியது (674) என்றும் கூறுவன இவ்வகையினவாதல் காண்க.

தலச்செய்தியும் அகப்பொருட்செய்தியும்

    தல சம்பந்தமாக அமைந்த பிரபந்தங்களில் அவ்வத் தல வரலாறுகளை இடைப் பெய்து விளக்குதல் கவிஞர் இயல்பு. விசேடண மாத்திரமாக அமைத்தலினும் கற்பனைகளில் அமைத்துக்காட்டுதல் புலமைத்திறத்துக்கு அடையாளம். குமரகுருபரர் அவ்வாற்றலிற் சிறிதும் குறைவுடையாரல்லர். அகத்துறைப் பொருளமைந்த பல செய்யுட்களில் அவ்வத்துறைப் பொருளுக்கு ஏற்பத் தலச்செய்தியை இணைத்து ஒன்றனுக்கு ஒன்று இன்றியமையாத வண்ணம் கற்பித்திருத்தலைக் காணலாம்.