ஆராய்ச்சி43

மதுரைச் செய்திகள்

    மதுரைக் கலம்பகத்தில், மதுரைத் தலத்தில் ஸ்ரீ சோமசுந்தரக் கடவுள்இயற்றிய திருவிளையாடற்செய்திகள் அகத்துறைச் செய்திகளோடு கலந்து அமைந்து பொருளைச் சிறப்பிக்கின்றன.

    இந்திரன் பழிதீரத்த திருவிளையாடற் செய்தி, “கடம்பாடவிச் சுந்தரரே, தேவரீர்பால் மயலுற்று உம்முடைய கொன்றை மாலையை யாம் விரும்பி நிற்ப எமக்குன் மத்தின் பெருவாழ்வாகிய பித்த நிலையையா தருவது? இந்திரன் பழியைத் தேவரீர் நீக்கினாலும் எம்மை வருத்துவதாகிய பெண்பழி போமோ? (146) என்ற தலைவி கூற்றில் அமைந்துள்ளது.

    தடாதகைப் பிராட்டியார் திருமணச் செய்தியைச் செவிலி எடுத்துக்காட்டி, “முன்னர்ப் பாண்டியர் திருமகளாகிய கன்னியை மணந்தல்லவாகன்னிநாடெய்தப் பெற்றீர்? இப்போது இக்கன்னியையும் ஏற்றருளின் பின்னும் செல்வமுண்டாகும்” (164) என்று தலைவியை ஏற்றுக்கொள்ள வேண்டுகின்றாள்.

    சோமசுந்தரக் கடவுளிடம் தன் துன்பத்தை முறையிட்டுக்கொள்ளும் தலைவி, “மதியும் தென்றலும் மன்மதனும் என்னைத் துன்புறுத்தாநிற்ப,தேவரீர் செங்கோல் செலுத்திப் பயன் என்ன?” (167) என்று வினாவுகின்றாள். அப்பெருமான் சுந்தரபாண்டிராகிய அரசு செலுத்திய செய்தியை நினைந்து கூறியது இது.

மடலேற்வதாகக் கூறப்புக்க தலைவி,

“வெள்ளிமன் றேறுதும்”
(137)
என்கிறாள். மதுரையிலுள்ள வெள்ளிமன்றத்தை இது குறித்து நிற்கின்றது. மடலேறுவார் மன்றிற் செல்வது மரபு,

    தலைவியின் நிலையைக் கூறி இரங்கும் செவிலி, “மன்மதனது கரும்பை இவள் வேம்பென்கிறாள். தேவரீர் திருத் தோளிலணிந்த வேம்பைக் கரும்பென்கிறாள். இவள் இவ்வாறு மாறியாடுகின்றாள் (மாறாகப் பேசுகின்றாள்); மாறியாடிய தேவரீரைத் தரிசித்தாருக்கும் மாறியாடும் வல்லபம் வருமோ? என்று இயம்புகின்றாள். இதன்கண் கால்மாறியாடிய திருவிளையாடல் குறிக்கப்பெற்றது.