அதனால் அன்று அவன் சுரநோயும் கூனும் நீங்கப்பெற்றான்; இப்போது என் காம வெப்பமும் தீரவில்லை; மன்மதன் வளைத்த வில்லின் கூனும் நிமிரவில்லை; இது மதுரையன்று போலும்!” (169) என்று இரங்குகின்றாள்.
பொருண்முற்றி மீளுந் தலைமகன் மேகத்தைப் பார்த்து, “உம்மைக் கண்டால் தலைவி இன்னும் யான் வரவில்லையென்று கருதிக் கண்ணீர் விடுவாள்; ஆதலின் நீங்கள் மதுரைக்குச் செல்லற்க; அன்றியும் நீங்கள் முன்னர்த் தளைப்பட்ட ஊராயிற்றே; அங்கே யானின்றித் தனித்தேகல் அழகன்று” (165) என்று மதுரைத் தலச் செய்தியொன்றை யமைத்துக் கூறுகின்றான்.
மதுரைத் தெப்பத் திருவிழாவில் சோமசுந்தரக் கடவுளைத் தரிசித்து மயல் பூண்ட தலைவி தனக்குச் சைத்தியோபசாரம் செய்யும் தோழியரை நோக்கி, “சொக்கப்பிரானைக் கரையேற்றிய நீர், காமமடுவிற்பட்ட என்பாற் பின்னும் குங்குமச்சேற்றைக் கொட்டிக் கரையேற விடாமல் தடுக்கின்றீர்களே” (173) என்று வருந்துகின்றான்.
காசியில் இறப்பாருக்கு விசுவநாதர் பிரணவோபதேசம் செய்து சாரூபப் பதவியை வழங்கியருளுவரென்பது அத்தல ஐதிஹ்யம். இச்செய்தியை அகத்துறையோடு பொருத்தியமைத்த செய்யுட்கள் சில காசிக்கலம்பகத்தில் வருகின்றன.
சந்திரனது தண்கதிரைப் பொறாமல் வெம்பிய தலைவி, “விசுவேசர் தம் அடியாருக்குச் சாரூபம் வழங்குகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கலையையுடைய பிறயையணியத் தருகின்றார்; இவ்வாறு பலருக்குக் கலைகள் கொய்து கொய்து கொடுக்கவும் இந்த மதிக்கொழுந்து வளர்ந்துகொண்டேயிருக்கின்றது என்ன வியப்பு!” (610) என்று வியக்கின்றாள்.
இறைவரது மாலைபெறாமல் வருந்தும் தலைவி யொருத்தி, “மாலைக்காலம் வந்துவிடுமே; மதிக்கொழுந்து தோன்றுமே; நம் விரகதாபம் கண்டு சுற்றத்ததார் நகுவரே” என்று ஏங்ககின்றாள்; பிறகு, “நகைத்தால் நமக்கென்ன? நமக்குத்தான் உயிர் போய்விடும்; அப்பால் காசிப்பிரானைத் தரிசிக்கலாம்; அவரது கொன்றை மாலையையும் பெறலாம்” (653) என்று தைரியம் கொள்கின்றாள்.
|