46குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

    பிறமகளிரைத் தூது விடுக்கும் தோழி, “கொன்றை மாலையை இவளுக்குக் கொடாமல் இருக்கும் நினைவுண்டேல் அது கூடாத செயல்; இப்போது நீர் கொடாவிட்டால் அது காரணமாக இவள் உயிர் துறந்தால், சாரூபம் அடைந்து அம்மாலையைப் பெறுவாள்; எங்ஙனமாயினும் இவள் கொன்றை மாலையை விடுவதில்லை” (692) என்று சொல்லும்படி கற்பிக்கின்றாள்.

    விசுவேசரது கொன்றை மாலையைப் பெறாது வாடிய தலைவி ஒருத்தி அதனை வாங்கித்தர வேண்டுமென்று சொல்ல வந்தவள், “தண்ணொன்று நறையிதழித்தார்” என்றவளவிலே ஆற்றாமை மிக்கு உணர்விழந்து தரைமேல் வீழ்ந்தாள். அவள் நிலையைக் காசிநாதருக்குக் கூறும் தோழி, “இங்ஙனம் தான் மூர்ச்சித்துக் கிடத்தலைக் கண்டால் இறந்தாளாகக் கருதித் தேவரீர் பிரணவோபதேசம் செய்ய வருவீரென்று எண்ணி இது செய்யத் துணிந்தனளோ?(608) என்கின்றாள்.

    காசியில் பாவஞ்செய்தவருக்கு யமதண்டனையில்லையென்பதும் வயிரவர் தண்டனை மட்டு முண்டென்பதும் புராண வரலாறுகள்; இதனைத் தலைவி,

“ஆமோ வ்விமுத்தத்................பொய்யாமோ”
(654)
என்பதிற் குறிக்கின்றாள்.

புறப்பொருளிலக்கணவமைதி

    அகப்பொருட் செய்திகளை இவ்வாசிரியர் இவ்வாறு மிக விரிவாகப் பலவகை நயங்களோடு அமைத்துள்ளமை இவருடைய அகப்பொரு இலக்கண நூற்பயிற்சியையும் புலமைத்திறத்தையும் வெளியிடுகின்றது. புறப்பொருட் செய்திகளையும் ஏற்றவிடங்களில் அங்கங்கே இவர் அமைத்துச் செல்கின்றார்.

    போர்செய்யப் புகுவாரும், போர்செய்வாரும், போரில் வென்றாரும் செய்யும்செயல்களையும் போர்க்களத்தே நிகழும் நிகழ்ச்சிகளையும் கவிமரபு பிறழாமற் கூறும் ஆற்றலுடையவர் இவர். போர்க்கள நிகழிச்சிகளைக் கூறும் செய்யுட்கள் ஓசையினாலும் பொருளாலும் வீரச் சுவையைத் தருவனவாக அமைந்துள்ளன.

    போர்செய்யப் புகுவார் பகைவேந்தனது பசுநிறையைத் கோடல் தமிழ் மரபு. இங்ஙனம் நிரைகோடற்கு முன் நற்்சொல்லாகிய நிமித்தம் பாரத்தலும், ஒற்றரைக் கொண்டு பகைவர்