ஆராய்ச்சி55

கும் மாடங்களிலுள்ள கொடிகள் சூரியனது தேரிலுள்ள குதிரைகளை அடித்து முடிக்குகின்றன; அம்மாடங்களிலே பதித்த நீலமணியின் ஒளியால் ஐராவதமாகிய வெள்ளை யானை தன்னிறம் வேறுபட்டுக் கருமேகம்போலத் தோற்ற அதுகண்ட தேவமகளிர், “இது பூவுலகத்திலிருந்து வந்த யானையோ!” என்று ஐயுறுகின்றனர்; அந்த யானையும் தன் நிறங்கண்டு தன்மேற் சேறுபடிந்ததாகக் கருதி ஆகாயகங்கையிலே நீராடுகின்றது (371); மற்றொருசார் பளிக்கு நிலா முற்றத்தின் மேல் உயர்ந்த சூளிகையிலுள்ள மரகதமணிகள் கதிர்வீச அதனைப் புல்லென்றெண்ணி உண்ணும்பொருட்டுக் காமதேனு தன் நாவை நீட்டுகின்றது.(370); அகழியில் நீருண்ணவரும் மேகத்தை யானைப்பாகர் யானையென்றெண்ணிக் கட்டுகின்றனர் (340). இவற்றில் உயர்வுநவிற்சியும் திரிபதிசயவணியும் அமைந்துள்ளன.

பிற கற்பனைகள்

    கற்பனைத்திறத்தினால் இவர் புனைந்து காட்டும் வேறு சில காட்சிகள் வருமாறு;-

    ஒரு சோலையின்கண் பச்சிளங் கமுகமரம் ஒருபால் நிற்ப அதன்கண் முல்லைக்கொடி ஏறி மட்டைகள்தோறும் படர்ந்து மறிந்து கீழே விழுந்து அருகிலுள்ள வாழைமரத்திலே படர்ந்து நிற்கின்றது; அந்தக் கமுகமரத்தினகண் மயிலொன்று தன் தோகையை விரித்து நடிப்ப நெடிய தாளையுடைய மந்திகள் பக்கத்திலிருக்கும் பலாமரங்களிலுள்ள பழங்களை அடிக்க, மற்றொரு வானரம் ஒரு பழத்தைத் தன்தலைமேற் சுமந்து கொண்டு அந்த முல்லைக்கொடியின் மேலேறி நடக்கின்றது         (348).

    இந்தக் காட்சியைத் தம் உள்ளத்திலே அமைத்த இம்முனிவர் இந்தக் கற்பனையை யமைக்கும்போது இதற்கு ஒரு மாதிரிகை யாக உலகில் நிகழும் கழைக் கூத்தர் ஆட்டத்தை நினைத்த வண்ணமேயிருந்தனரென்பது இக்காட்சிக்கு அவ்வாட்டத்தை உவமையாகக் கூறுதலால் உணரலாம்.. முதலில் வானரங்களின் காட்சியைக் கூறிப் பின் கழைக்கூத்தர் செயலை நமக்கு நினைப்பூட்டினும், அவர் முதலில் நினைத்தது கழைக் கூத்தராட்டமே யென்பதில் தடையில்லை; அதனால்தான் அந்த உவமை தொடர்ந்து விரிவுபட அமைந்துள்ளது.

    களிற்றின்மேல் அரசிளங்குமரர் திருவுலாப்போத மாடங்களின் வெண்ணிறத்தால் அக்களிற்றின் நிறம் வெண்மையாகி