56குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அவற்றை ஐராவதத்தைப் போலத் தோற்றுவிக்கவும், வீதியிலுள்ள மகளிருடைய பார்வை அக்குமரர் மேனியிற் படிந்து அவர் உடல் முழுவதும் கண்ணிருத்தலைப்போலத் தோற்றுவிக்கவும், பல இந்திரர்களைப்போல அவர்கள் தோற்றமளிக்கின்றனர் (472). இங்ஙனமுள்ள காட்சிகளைப் பல விடங்களிற் காணலாம்; (344, 396, 397, 584, 593).

மீனினங்கள்

    இவ்வாசிரியர் மீனினங்களையும், எருமைகளையும், வானரங்களையும் தம் கற்பனைக்குரிய பொருளாகப் பலவிடங்களில் எடுத்தாளுகின்றனர்.

    ஒரு வாளைமீன் சந்திரனைக் கிழித்து அமுததாரை பொழியச் செய்து மீளுகின்றது (18); ஒரு வாளை முகிற்படலத்தின் வயிறு உடைய வகைத்துக் கற்பகப்பூங்காடும் கங்கையும் நீந்தி மதியின் முயலைத் தடவி நட்சத்திரங்களை நடுங்கச்செய்து அண்டகூடத்தைத் திறந்து பெரும்புறக்கடலிலுள்ள சுறவோடும் விளையாடுகின்றது (26); மற்றொரு வாளை மதியின் வயிற்றைக் கீறிச் சென்று அங்கிருந்து இழியும் வெண்ணிற அமுத அருவியால் காவேரியை ஆகாயங்கையாகச் செய்து பிறகு மீட்டும் கற்பக வனத்தை உழக்கி அதன்கண் உள்ள பொன்னிறமுடைய பூந்ததாதை ஆகாயகங்கையிலே உதிர்த்து அதனைப் பொன்னி நதியாகச் செய்கின்றது (447); வேறொரு வாளை காமதேனுவின் மடியிலே முட்ட அது தன் கன்றெர எண்ணிப் பாலைச் சொரிகின்றது (395); மடுவிலே யிருந்த வாளையொன்று வண்டினொலிக்கு அஞ்சி ஆகாயத்தைக் கடலென்றெண்ணித் தாவ, ஆகாயகங்கையின் புனல் எதிர்பாராதவண்ணம் அதற்குக் கிடைக்கவே, பிறிதொரு தெய்வத்தை உண்மைப் பொருளென்று மயங்கி அன்பு செய்வார் இறைவன் நல்லருள் செய்ய உறுதிப் பயன் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தது போல மகிழ்கின்றது (406); பிறிதொன்று கற்பகத்தை உதைத்துத் தான் போகின்ற போக்கிலே தென்னம் பழத்தை விழுத்துகின்றது    (424).

    இவ்வாறே சுறவும் (22), கயல்களும் (29, 56, 426), வராலும் (50), சேலும் (446) செய்யும் செயல்களும் இம்முனிவருடைய கற்பனைத்திறத்தை வெளியிடுகின்றன.