இவர் தம் கற்பனையில் எருமைகள் பலவற்றைக் காட்டுகிறார். ஓர் எருமை தன் இளங்கன்றை நினைந்து சொரியும் பாலால் பொய்கை பாற்கடலைப் போன்ற தோற்றத்தைப் பெறுகின்றது (24, 324); சித்தாமிர்தத் தீர்த்தத்தில், பணைமருப் பெருமை யொன்று தன் மடி மடைதிறந்த திம்பாலாறும் பங்கயத்தேனாறும் கலந்து வெண்மையும் செந்நிறமும் தந்து, அவ்விரண்டு நிறத்தை முறையே பெற்ற முருகப் பிரானுடைய புகழையும் பிரதாபத்தையும் நிகர்க்கும்படி செய்கின்றன (355); மற்றோரிடத்தில் களிற்றின் மதநீர் யமுனை போலவும் தேனாறு வாணிபோலவும் பாய அவற்றோடு கங்கா ந்தியைப்போல ஓர் எருமை பொழியும் பால் பாய்பெருக்காறுஉவட்டெழுகின்றது (446).
இப் புலவர்பிரான் குரங்குகளைக் கொண்டு காட்டும் விசித்திரக் காட்சிகள் பல. “தழைகெழு பொழிலின் முசுக்கலை மைப்புய லிற்பாயத் தவழிள மதிகலை நெக்குரு புத்தமு த்ததோடே” (42) என்று ஒரு முசுக்கலை தாவுவதை இவர் வருணிக்கும் செய்யுளின் சந்தம் அந்தக் குரங்கு குதித்துக் குதித்துத் தாவுவது போன்ற அமைப்புப் பெற்று விளங்குகின்றது.
ஒரு பொழிலில் கொழுந்தேன் வெள்ளம் பெருக அதன் கண் உள்ள பலாமரம் ஒன்றில் இருந்த முசுக்கலையொன்று அப்பலவின் கொம்பு ஒடியவே அதிலிருந்த கனியையே குடமாகக் கொண்டு நீந்துகின்றது (100); சில குரங்குகள் ஒரு கொம்பிலிருந்து பாயும்போது அவை இருந்து செல்லும் விசையினால் அம்மரக் கொம்பு விசைத்தெழுந்து சந்திரனைக் கிழிக்கின்றது (100). குரங்காட்டிகள் குரங்கைப் பலவகையாக ஆட்டி விநோதங்காட்டுதலை உலகிலே காண்கின்றோம். இப்புலவர்பிரானோ அவர்களாற் காட்ட முடியாத விநோதங்களைத் தம் கவிதை யுலகத்திலே காட்டுகின்றார். மந்திகளுக்குக் கழைக்கூத்தருடைய வேடத்தை உவமைலங்காரங் கொண்டு அமைக்கின்றார் (348, 656); முற்பகலில் ஒருவர் பொற்குடம் நிரம்பப் புதைத்து வைத்த நிதியனைத்தும் அஞ்சனத்தாற் பார்த்த கள்வர் கண்டெடுக்கும் காட்சியை, ஒரு மந்தி வேரிடைப் பழுத்துப் பூமியினுள் மறைந்து கிடந்த பலாப்
|