பழத்தைக் கண்டு பொன்னிறமுள்ள அதன் சுளைகளைத் தோண்டயெடுக்கும் செயலாற் காட்டுகின்றார் (587); இருவேறுருவையுடைய மந்தியொன்று பொன்னிறம் பழுத்த சுளைகளையுடைய பலாப் பழத்தைத் தன் மடியிலே வைத்துத் தன் நகத்தால் அதனைப் பிளந்து உள்ளிருக்கும் சுளைகளை எடுத்து உண்ணுவதாகக் கற்பித்து, இரணியனது மார்பைப் பிளந்து குடரையும் நிணத்தையும் உண்ட நரசிங்க மூர்த்தியின் தோற்றத்தை அதற்கு உவமையாக்குகின்ார் (312); பின்னும் ஓரிடத்தில் ஒரு மந்தி கமுகங்குலையைப் பறித்து மீளுங்காட்சியை அமைத்து அக் காட்சிக்கு சுக்கிரீவன் இராவணனுடைய முடிகளைப் பிடுங்கிப் பாய்ந்த செயலை ஒப்புக் கூறுகின்றார் (699).
தெய்வங்களைப்பற்றிய கற்பனை குமரகுருபர முனிவர் தம் கற்பனைக்கு நிலைக்களனாக உலகியற் பொருளை ஆக்குவதோடமையாது தெய்வங்களையும் அங்ஙனம் அமைக்கின்றனர். விநாயகரது விளையாடல்களாகவும் (57, 533, 546), முருகக் கடவுள் விளையாடல்களாகவும் (401, 403, 404) இவராற் கற்பிக்கப்பெறும் காட்சிகள் சில.
முருகக் கடவுள் உமாதேவியாருடைய வயிறு குளிரும்படி தவழ்ந்தேறிச் சிவபிரானது திருமார்பிற் குரவையாடுகின்றார்; அவர் திருக்கரத்திலுள்ள உடுக்கையைச் சிறுபறை போலத் தட்டி முழக்குகின்றார்; அவர் கையிலுள்ள அக்கினியில் அவர் திருமுடியிலுள்ள கங்கைநீரை அள்ளி ஊற்றி அவிக்கின்றார்; பிறையை எடுத்து அப்பெருமான் ஆபரணமாகிய பாம்பின் வாயிலே செருகுகின்றார்; திருமுடியிலணிந்த அறுகம்புல்லையெடுத்து அவர் கரத்திலுள்ள மானுக்கு அளிக்கின்றார்; அப்பிரானது செம்மேனி வெண்ணீறு தூளெழப் புழுதியாட்டு அயர்கின்றார்; சடைக்காட்டிலுள்ள நீரில் துளையமாடுகின்றார்; இத்தகைய சிறு விளையாட்டுக்கள் ஒரு செய்யுளில் வருணிக்கப் பெறுகின்றன (401).
மற்றொரு காட்சி வருமாறு” முருகக் கடவுள் சிவபெருமான் திருமுடியில் அணிந்த பிறையோடு உமாதேவியார் திருமுடியிற் சூடிய முத்தாலாகிய பிறை யென்னும் அணியை இணைத்துப் பார்க்கும்போது அத்தோற்றம் பூர்ணசந்திரன் ஒத்தது; அதை முழு மதியென்றே கருதிச் செம்பாம்பாகிய கேது வந்து
|