கின்றனரே! அங்கே திருமால் வாராரோ?” என்று ஒருவர் வினாவுதலும் கூடும்; அவ்வினாவிற்கு ஏற்ற விடையையும் இவர் உணர்த்துகின்றார்; “நடராசப் பெருமான் தூக்கியது இடத்திருவடியே; அவ்வடி திருமாலின்தங்கையாராகியஉமாதேவியாருக்கு உரியது; ஆதலின் திருமால் கண்டாலும் குறைவின்றென்று தூக்கினர் போலும்” (461) என்பர். யமன்பால் தியாகேசருக்கு இரக்கம் இருப்பதாக ஐயுற்ற இவர், நடராசப் பெருமானுக்கு அவ்விரக்கம் இல்லையென்றே கருதினர்போலும்; “நமனாரே, ஜாக்கிரதை! என் பக்கத்தில் வாரற்க; அப்படி வந்தால் உம்முடைய பேரும் ஒழிந்து விடும்; நடராசப் பெருமான் உமக்குரிய தென்திசையை நோக்கி ஒரு திருவடியைத் தூக்கி நடனம் புரிவதன் உட்கருத்தை நினைவில் இருத்துவீராக” (465) என்று இவர் நமனை அச்சுறுத்துகின்றார். நடராசப் பெருமான் குஞ்சித பாதத்தின் வளைவு இயல்பாக அமைந்ததன்றாம்; அரிபிரமர் முதலானோர் முடிகொண்ட தலைவணக்கின் வளைவெல்லாம் அவ்விடத்தாளிற் சேர்ந்து அப்படியாயிற்றாம் (543). அப்பெருமான் நடனம் புரியும்போது ஒருகால் காட்டிக் கையமைத்துப் பாதத்தைச் சுட்டிச் செய்யும் அபிநயங்களுக்கு இவர் “ஒருகாற் கும்பிட்டாற் கதி கூடும்” என்று குறிப்பதாகப் பொருள் உரைக்கின்றார் (479).
வேற்றுமையணி அமைய இவர் கூறும் கற்பனைகள் சில.
“சிவபெருமான் ஐம்பொறிகளாகிய அரவுகளை ஆட்டுவிக்கும் சித்தர்; அவரை ஒரு பாம்பு தில்லையில் ஆட்டுவிக்கின்றது” (455) என்று பதஞ்சலிக்கு ஆடிய பரம நாடகத்தை இவர் பாராட்டுகின்றார்; இதனையே வேறுவகையாகச் சிலேடையணியும் அமைய, “சென்றவரைத் தாமாக்கும் நடராசப்பெருமானைப் பதஞ்சலியார் பதஞ்சலியாராக்கினார்” (470) என்பர். “பாம்புக்குச் சந்திரன் அஞ்சுவது இயல்பு; ஆனாலசிவபிரான்திருமுடியிலுள்ளசந்திரனோஅஞ்சுவதில்லை;அத்தகைய அது இறைவி நறுநுதலைக்கண்டு அஞ்சுகின்றது; சிவபிரான் திருக்கரத்திலுள்ள மான் காற்புலி (வியாக்கிரபாதர்)க்கு அஞ்சுவதில்லை; இறைவி விழிமானைக் கண்டு அஞ்சுகின்றது” (485) என்று முரண்பாடான இயல்புகளைக் கூறுகின்றார்.
|