தம் ஆசிரியராகிய மாசிலாமணி தேசிகருடைய பெருமையைப் பலவகையிற் பாராட்டிப் பரவும் இம்முனிவர் அவருடைய திருநாம சம்பந்தமாகவே பல கற்பனைகளை அமைக்கின்றனர். அந்த மாசிலாமணிக்கும் பிற மணிகளுக்கும் இன்ன இன்ன வேறுபாடுகள் உண்டு என்று நயம்பெறப் பல செய்திகளை இயம்புகின்றார்.
கடலில் வந்த சிந்தாமணி கருதியவற்றையே நல்கும்; இம்மணி கருத்துக்கு எட்டாத பேரின்பட்டை நல்கும் (571). உலகிலுள்ள மணிகளை மிகவும் முயன்று பெறவேண்டும்; இந்த மணியைச் சும்மா இருந்தாரே பெற்றார் (523). அந்த மணிகள் தம்மைக் கைக்கொண்டவர்களுடைய பொருளாகும்; இதுவோ கொண்டவரைத் தான் கொண்டு ஆளும் (574). அவை பல பஞ்சு நூல்களிற் கோக்கப்படுவன; இது தமிழ் நூலிற் கோக்கப்படுவது (579). மணிமந்திர மருந்து மூன்றினாலும் தீராத பிறவி நோயை இந்த மணியொன்றே தீர்த்துவிடும் (586). மற்ற மணி பாம்பின் முடிமேல் இருக்கும்; இது தன் முடிமேற் பாம்பைக் கொண்டிருக்கும் (591). மற்ற மணிகள் பொன் கொடுத்துக் கொள்வன; இதுவோ உடல் உயிர் பொருள் மூன்றையும் கொடுத்துக் கொள்வது (594). இத்தகைய கருத்துக்கள் உள்ளத்திற்கு இன்பமூட்டும் கற்பனைகளாகத் திகழ்கின்றன. சைவ சித்தாந்தக் கருத்துக்களையமைத்து ஒன்றற்கொன்று மாறுபாடாகத் தோற்றும் வண்ணம் சில செய்திகளைக் கூறுவர் (582, 585).
நரை வந்ததென்றும் பிணி மூண்டதென்றும் மரணம் வருமென்றும் உலகிலுள்ளார் அஞ்சுதல் இயல்பு; அங்ஙனம் அஞ்சாமல் அவற்றை மகிழ்ச்சியோடுஎதிர்நோக்குவாரும் உளரென்றால் நமக்கு ஆச்சரியமாகத் தோற்றும்; இந்த முரண்பாடான நிகழ்ச்சியைக் காசியிலே காணலாமாம்;
இவ்வாறு ஒரே செய்தியைப் பலவேறு நயம்தோற்றும்படி அமைத்துப் பல செய்யுட்கள் பாடும் இயல்பினர் இவ்வாசிரியர். அர்த்தநாரீசுவரத் திருவுருவத்தைப் பற்றிப் பல விடங்களிற்