(66)
என்கின்றார்.இங்கே புதிய ஆடையை உடுத்த மதியென வேறொரு பொருளுந்தோற்றியது. அம்மானை, இடைச்சியார், சித்து, சம்பிரதம், களி, என்ற கலம்பக வுறுப்புக்களில் இவ்வாறு அமைந்த தொனியைப் பரக்கக் காணலாகும். ஒரு செய்தியைத் தாம் கூறப்புக்க கருத்துக்கு ஏற்ற வகையில் தொனிக்கும்படி அமைக்கும் சதுரப்பாட்டை இச்செய்யுளிற் காணலாம். இவரியற்றிய இரண்டு பிள்ளைத்தமிழ்களிலுமுள்ள அம்புலிப் பருவங்களில் சந்திரனுக்கு ஒப்பும் இழிவும் தோற்றும்படி சொற்றொடரமைத்தலைக் காண்க (65 முதலியன).
தேவர்கள் சந்திரகிரணத்தை உண்ணுவரென்று கூறுதல் மரபு. இதனை இவர்,
| “பொங்கமுத மமுதா சனர்க் குதவினாய்” |
(412)
என்பதில் செய்தியளவிற் சொல்கின்றார்.
| “ஓர் கலைமதிக் கலசவமுதுக் கிரைக்கும் |
| பெருந்தேவர்” |
(74),
| “சொற்றரு பெரும்புலவர் கலையமுது கொளவிருந் |
| தோகைமேல் கொண்டருளினாய்” |
(411)
என்பவற்றில் சிறிது உயர்வு தோற்ற இச்செய்தியை அமைத்தார். இதே செய்தியைச் சந்திரனுக்கு இழிவு தோற்றும்படியும் இவர் அமைக்கின்றார்;
| “குலத்தோடு தெய்வக் குழாம்பிழிந் தூற்றிக் |
| குடித்துச் சுவைத்துமிழ்ந்த கோது” |
(65)
என்பதில் இவர் சொல்லாற்றலைக் காணலாம். ஒரே செய்தியைப் புகழ்ச்சியாகவும் இகழ்ச்சியாகவும் தோற்றும்படி செய்யும் இப்புலவருடைய சதுரப்பாடு வியத்தற்குரியது.
சிவபெருமான் சுந்தரபாடியராக எழுந்தருளியபொழுது தமக்கு இயல்பாகவுள்ள மாலை, கொடி, ஆபரணம் என்பவற்றைத் துறந்து பாண்டியர்களுக்குரியவற்றை ஏற்றருளினரென்ற செய்தியைப் பல புலவர்கள் பலவிடங்களிற் சொல்லியுள்ளனர். ஆயினும் இவர் அதனைக் கூறும் முறை நயம்பெற விளங்குகின்றது. முன்னை யணி முதலியவற்றைத் துறந்த