ஆராய்ச்சி69

தனால் அவை துன்புற்றன வென்று ஒருபொருள் தோற்றும்படி இவர் அச்செய்தியை அமைக்கின்றார். சுந்தரபாண்டியர்,

“பொன்பூத் தலர்ந்த கொன்றைபீர் பூப்பக்
  கருஞ்சினை வேம்பு திருமுடிச் சூடி”
னரென்கின்றார்(105).
பிரிவினால் கொன்றையானது பசலை பூப்பவென்ற ஒருபொருள் தோற்றவைத்தார்; ஆயினும், பொன்னிறம் பூப்பவென்ற அதன் உண்மையியல்பைக் குறிக்கும் பொருளும் அதில் உள்ளது. இவ்வாறே,

“அண்ணலா னேறு மண்ணுண்டு கிடப்பக்
  கண்போற் பிறழுங் கெண்டைவல னுயர்த்து
  வரியுடற் கட்செவி பெருமூச் செறியப்
  பொன்புனைந் தியற்றிய பைம்பூண் டாங்கி”
(105)
என்னும் பகுதியில் திருமால் மண்ணுண்ட செயிதியை்யும் பாம்பு இயல்பாகவே பெருமூச்செறிவதையும் சிவபிரானுடைய பண்டைக் கொடியும் பாம்பும் முறையே மண்ணையுண்டு பயன்ற்றொழிந்தது, ஏக்கத்தாற் பெருமூச்செறிந்தது என்னும் கருத்துத் தோற்றும்படி அமைக்கின்றார்.

    இந்த அமுதம் போன்ற தலைவிக்குப் பரிகாரம் ஒன்றும் இல்லை என்ற தோழி கூற்றை,

“மாற்றொன் றிலையென் மருந்துக் கந்தோ”
(109)
என்று சமற்காரமான சொற்றொடர்களிலே யமைக்கும்போது மாற்று, மருந்து எனத் தொடர்புடைய பொருள் இரண்டன் பெயர்கள் ஒருங்கே தொனிக்கின்றன.

    “பரசிவம் தனக்கென்று ஒரு வரையறை யில்லாதது; எவர்க்கும்பொது” (330) என்னுங் கருத்தை விளக்கவந்தவர் சிதம்பரத்திலும் திருவாரூரிலும் சிவபிரான் எழுந்தருளியிருத்தலை அக்கருத்துக்கு உபகாரப்படும் வகையில் அமைத்து,

“எல்லோர்க்கும் பொதுவினிற்கும்
  மதுவேய் மலர்ப்பொழி லாரூ ரினும்வைகும்”
என்கிறார்.இதில் பொதுவென்பது சிதம்பரத்தையும் ஆரூரென்பது திருவாரூரையும் குறித்து நிற்பினும், யாவருக்கும் பொதுவாக நிற்கும், யாருடைய ஊருளும் தங்குமென எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்ற பொருளொன்றையும் தோற்றுவித்தல் காண்க.