“கமலைப்பிரான் சடாடவி நெருப்பை ஒத்தது, கொன்றை மலர் அந்நெருப்பில் இட்ட பொன்னை ஒத்தது. அதனை மொய்க்கும் வண்டுகள் நெருப்பில் இட்ட கரியை ஒத்தன. கங்கை ஆபரணம் செய்விக்கும் பெண்ணை ஒத்தாள். பிறை அதனைச் செய்யும் கிழத் தட்டானை யொத்தது” (346).
இவருடைய வாக்கில் மடக்கு முதலிய சொல்லணிகளும் விரவி வந்துள்ளன. அவற்றுட் சில வருமாறு:
| “சுடர்ப்பருதி பருதிக் கொடுஞ்சி மான்றேர்” | | “சாவமே தூக்கிற் சமனுஞ் சமனன்றே” | | | | “சிலை சிலை யாக்கொண்ட தென்மதுரேசர்” |
இன்னும் விரிவான மடக்குகளை 130, 142, 159, 162, 329, 560, 577, 627, 628, 688, 691, 696-ஆம் செய்யுட்களிற் காணலாம்.
‘ஞானாசிரியரை அடைந்து சீவபோதம் நீங்கப்பெற்றுச் சிவபோத மடைந்தேன்’ (588) என்னும் கருத்தை யமைத்து,
| “..........................................நற்கமலை | | ஊரிற் குறுகினே னோர்மாத் திரையளவென் | | பேரிற் குறுகினேன் பின்” |
என்று ஒரு செய்யுளமைத்தார். சீவனென்பது ஒரு மாத்திரை குறைந்தால் சிவனெனவாகும். இது மாத்திரைச் சுருக்கமென்னும் சொல்லணி.
வேறு பலவகையான சமற்காரம் பொருந்திய செய்யுட்களை இவர் இயற்றியுள்ளார். அவற்றை வகைப்படுத்தித்தனித் தனியாக ஆராய்ந்தால் மிக விரியுமாதலின் சில உதாரணங்கள் மாத்திரம் இங்கே எடுத்துரைக்கப்படும்.
சிவபெருமானை நோக்கி, ‘தேவரீர் இன்னது செய்தல் தகாது; இன்னது செய்தல் வேண்டும்’ எனச் சில காரணங்காட்டி இயம்புகின்றனர். “அங்கயற்கண்ணம்மை நாணத்தால் தலைகவிழ்ந்து நிற்பச் சொக்கநாதர் ஊர்தோறுந் திரிந்து முடைத்தலையிற் பலி கொள்ளுதல் அழகன்று” (108) என்பர்.
|