“பிரமன் தலைகளைச் சிரத்தில் மாலையாகவும் திருமால் தலைகளைப் பாதத்திற் கிண்கிணி யாகவும் அணிதலை இனித்தேவரீர் ஒழிக; இல்லையெனின் முறையே அவ்விருவரும் தேவரீருடைய முடியையும் அடையையும் கண்டுவிட்டதாகப் பொய் கூறப்புகின் அதற்கு அத்தலைகளே சான்றாகும்” (323) என்பர். “தில்லைவாண! திருமால் அமளியும் இடமுமின்றி நின்வாயிலில் நெடுநாள் வைகினராதலின் அவருக்கு அவற்றை அளிப்பாயாக” (556) என்றார்; அவையிரண்டும் அவர் இழந்தமையை, “ஆதிசேடனாகிய அமளியைப் பதஞ்சலியாக்கி நின் அருகில் வைத்துக் கொண்டாய்; அத்திருமாலினுடைய பாற்கடலாகிய இடத்தை வியாக்கிரபாத முனிவர் புதல்வராகிய உபமன்யுவுக்கு அளித்தாய்; அதனால் படுக்கையும் இடமுமின்றி அவர் இருந்தனர்” என்று எடுத்துக் காட்டுகின்றார்.
சிவபெருமானைப் பட்சபாத முடையவரென்று சில செய்யுட்களிற் கூறுகின்றார்: “உன் திருமுடியைக் கங்கையாகிய பெண்ணுக்கும், இடப்பாகத்தை உமாதேவியார்க்கும் வழங்கினை; இந்தத் தலைவிக்கு மாத்திரம் உன் புயத்தை வழங்கினாயல்லை; பொதுவில் நின்ற உனக்கு நடுநிலையின்மை எங்ஙனம் வந்தது?” (155) என்பது ஒரு தோழி கூற்று; “உமாதேவியும் நீயும் முருகக் கடவுளை மாத்திரம் மடித்தலத்து இருத்தி முத்தாடி உள்ளம் நெக்குருக மோந்தணைந்து உவக்கின்றீர்களே; உலக மெல்லாவற்றையும் பெற்ற உங்களுக்கு அவ்வொருவனிடத்து மாத்திரம் ஆதரவு பிறக்கும் பட்சபாதம் வந்தது எப்படி?” (205, 670) என்று இவர் வினவுகின்றார்.
சில சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் இயல்பான பொருளொன்று இருப்ப வேறு பொருளொன்றும் கற்பித்து அதற்கேற்ற செய்திகளை அமைப்பர்:
திருவாரூருக்குக் கமலாலய மென்பது ஒரு பெயர். திருமகள் தவம் புரிந்து வாழ்ந்தமையின் அதற்கு அப்பெயர் உண்டாயிற்று. அத்தலத்தை மண்மகளின் இருதயகமலமென்றும் வழங்குவர். மண்மகளின் இருதய கமலமாகிய ஆலயமாதலின் கமலாலயமென்னும் பெயர் வந்ததென்று இவர் வேறு பொருள் விரிப்பர் (315).
|