74குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

    வைத்தீசுவரன் கோயிலுக்கு வேளூரென்பது ஒரு பெயர்; முருகக் கடவுள் பூசித்தலின் அதற்கு அப்பெயர் வந்தது. இவர் அதற்குக் காமனது ஊரென வேறுபொருள் கற்பித்து அதற்கேற்ற காரணத்தை,

“கஞ்சத் தவிசிற் றிருவன்னார் கடலந் தானைக் கைந்நிமிரக்
காமன் படைவீடெனப்பொலியுங் காட்சி யானு மப்பெயரிட்
டஞ்சொற்றமிழோர்புகழ்வேளூர்”
(407)
என அமைக்கின்றார்.
    மாசிலாமணி தேசிகரென்னும் தம் ஆசிரியரது இயற்பெயருக்கு ஒரு காரணங் கற்பித்து, “சிவபெருமானாகிய கடவுள் மாமணிக்கு மிடற்றில் ஒரு மாசு உண்டு; அந்த மாசு இல்லாமல் எழுந்தருளின திருக்கோலமாதலின் மாசிலாமணி யென்னும் திருநாம்ம் வந்தது” (569) என்பர். மூன்று கரணங்களென்னும் பொருளையுடைய தம்முடைய திரிகரணங்கள் திரிந்த கரணங்களென்னும் பொருளுக்கும் ஏற்ற இயல்பை யுற்றனவென்றமைத்து, “இதுகாறும் அவகரணங்களாக இருந்த அவை ஆசிரியருடைய தொண்டில் ஈடுபட்டுச் சிவகரணங்களாகத் திரிந்தன; ஆதலின் அவற்றைத் திரிகரணங்களெனக் கூறல் தகும்” (587) என்பர்.

பிற சமற்காரங்கள்

    சிவபெருமானது பரத்துவத்திற்குத் திருமால் அவரை இடபமாகத் தாங்குவதே சான்று என்பார். அதனை மடக்கணி பட,

“நல்லார் தொழுங்கமலை நாதனே நாதனெனக்
 கல்லாதார் சொல்லுங் கடாவிற்கு-வெல்லும்
 விடையே விடையாக மெய்யுணரா ரையுற்
 றிடையே மயங்குமிது வென்”
(329)
என்பர்.
    ‘சிவபெருமானால் உதைபெற்ற நமன் பெரிய தவமுடையவன்’ என்று ஒரு செய்யுளிற் கூறுகின்றார். அதைச் சுவை பெற நிறுவத் தொடங்கி, “தேவரீருடைய அடிமுடியைத் தேடிக் காணாமல் நிற்கும் தேவர்கள் இருப்ப, தொண்டரோடு பகைத்தேனும் தேவரீர் திருப்பாதங் கண்டு புகழடைதலின் அவன் தவம் பெரிது” (340) என்கிறார்.