பக்குவமில்லாத தமக்கும் அருள்புரிய வேண்டுமென்று இறைவனையும்,ஞானதேசிகரையும் சில காரணங் கூறி வேண்டுவர்:
“நடராசப் பெருமானே, இதுகாறும் எவ்வளவோ பிறவியை நானடைந்து துன்புற்றேன்; இனிவரும் பிறவிக்கு அஞ்சேன்; ஆனால் உன் திருநடனதரிசனம் பெற்றும் ஒருவன் நற்கதி பெறவில்லையே! வேதம் உண்மையைச் சொல்லவில்லையோ வென்று தேவர்கள் அஞ்சுவர்; அங்ஙனம் அஞ்சாமல் இருத்தற்கேனும் எனக்கு அருள்புரிக” (469) என்பர். இதன்கண் சிதம்பரம் தரிசனமாத்தரத்தில் முத்தி யளிப்பதென்னும் செய்தி அமைந்துள்ளது.
“சத்திநிபாதத் தன்மை பெற்றவர்களுக்கு நீ அருள்புரிதல் வியப்பாகாது; ஊமையையும் பேசவைத்த மாணிக்கவாசகரைப் போலவும் அக்கினியாற் பற்றப்படாத வாழைத் தண்டில் தீ மூட்டியது போலவும் சிறிதேனும் பக்குவமில்லாத எனக்கு அருள்புரிவது தான் வியப்பாகும்; அங்ஙனம் செய்தலே நின் பெருமைக்குத் தக்கதாம்” (581) என்று தம் ஞானதேசிகரிடம் இவர் விண்ணப்பித்துக் கொள்கின்றார்.
குறிப்பு வகை
இம்முனிவர்பிரான் குறிப்புவகைகளாற் பொருள் புலப்படுத்தும் இடங்கள் சில உண்டு:
கௌமாரி கடல் சுவற வேல்விட்டவளென்பதை,
“கடல்வயி றெரியவொள் வேலினைப் பார்த்தவள்”
(12)
என்பர். உடலை விடுதலென்பதனை,
“சுமைபோடுதல்”
(248)
என்றும் வீணாக உழைப்பரென்பதை,
“பாழுக் கிறைப்ப”
(295)
என்றும், இனியவற்றைக் கரும்பென்றும் (171) இன்னாதவற்றை வேம்பென்றும் (154, 341), மிக்க சிறப்பையுடையதென்பதை,