ஆராய்ச்சி77

“நுந் தாலிக்கு வேலி”
(440)
என்றும் உவமைக் குறிப்பாற் குறிப்பர்.
    ‘சிவபெருமான் ஆலகாலவிடம் உண்ணாவிடின் தேவர் இறந்துபட அவர் மனைவியர் மார்பிலடித்துக் கொண்டு புலம்புவர்’ என்பதை,

“நாயகன் கண்டங் கறாதேலந் நாட்டமரர்
 சேயிழை மாதருக்குச் செங்கைகளுங் கொங்கைகளும்
 சிவக்கும் போலும்”
(529)
என்றும், ‘முருகக்கடவுளுடைய திருவடியிலே ஏதேனும் பட்டால் அதுகண்டு உமாதேவியார் வருந்துவர்’ என்பதை,

“உமையம்மை .......................கடனன்றால்”
(421)
என்றும் குறிப்பாற் புலப்படுத்துவர்.
    மகளிருக்கு இடையில்லை யென்று புலவர் கூறும் கருத்தை இவர் வேறுவகையிலமைத்து,

“ஈயா மாக்க டீமொழி கவர்ந்த, சிற்றிடை”
(569)
என்பர்; தீமொழியாவது இல்லையென்பது.
பழிகூறுதலை நாவளைத்தல்
(695)
என்பர்.
“காசி யாண்டகையார் பெருந்தகைமை யழகி தாமே”்
(640)
என்றவிடத்து அழகிதென்பதை அழகன்றென்னும் எதிர்மறைக் குறிப்புப்பட வைத்தார்.

    “வெள்ளென” (18) என்னும் நிறம்பற்றிய குறிப்பால் தோல்வியைக் குறிப்பர். கெட்டேன், கோ என்னும் இரக்கக் குறிப்புச் சொற்களையும், ‘ஓ’ (493) என்னும் வியப்புக் குறிப்பையும் இவர் அமைக்கின்றார். “நமனார்” (465) என்று யமனை விளிக்கும் போதுள்ள பன்மை இகழ்ச்சிக் குறிப்பில் வந்தது.

    இவற்றையன்றி, “கிண்கிணெனுங் கிண் கிணி” “கிணின் கிணினென” (19, 400), “கலின் கலினென” (400), “நெறுநெறு நெறுவென” (539), “கூகாவென்று குரைப்பது” (555), “இழுமென் குதலை” “இழுமென் மழலை” (394, 656), “இழுமெனருவி” (409), “இழுமென் மொழி” (439) என்பவற்றில் அனுகரண வோசைகளாகிய ஒலிக்குறைப்பை அமைக்கின்றனர்.