78குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

பிரபந்தச் செய்திகள்

    எழுத்து முதலாம் ஐந்திலக்கணங்களை இவ்வாசிரியர் நன்குணர்ந்தவரென்பதை இதுகாறும் ஆராய்ந்த செய்திகள் விளக்கும். அலங்கார நூலுள் இலக்கணம் கூறப்பெறும் காப்பியம், முத்தகச் செய்யுள், சித்திரகவி என்பவற்றை ஓரிடத்திற் குறித்துள்ளார். காப்பியம் இயற்றுவதனால் ஒரு புலவனுடைய பேராற்றல் விளங்குகின்றது. காப்பியங்கள் சிறு காப்பியம் பெருங் காப்பியமென்று இருவகைப்படும். சிறு காப்பியங்களில் பிரபந்தங்களையும் அடக்குவர். ஆதலின் இம்முனிவரைக் காப்பிய கவிஞரென்று கூறுதலில் இழுக்கொன்றும் இல்லை. ஒரு கலிவெண்பாவையும், இரண்டு பிள்ளைத் தமிழ்களையும், மூன்று கலம்பகங்களையும். ஒரு நான்மணிமாலையையும், இரண்டு மும்மணிக்கோவைகளையும், ஒரு மாலையையும்,. நீதி நெறி விளக்கம் என்னும் நீதிநூல் ஒன்றையும், சிதம்பரச் செய்யுட் கோவையையும் இவர் இயற்றினர். பலவகை யாப்புக்களையும் விறவுவித்துப் பாடுதலில் இவருக்கு அதிக விருப்பம் இருந்ததென்பது, பலவகை யாப்புக்களும் விரவியமைந்த கலம்பகங்கள் மூன்றும் செய்யுட்கோவை ஒன்றும் இவர் இயற்றி யிருத்தலால் விளங்கும்.

    இவ்வாறு சிலவகைப் பிரபந்தங்களையே இவர் இயற்றியுள்ளனரேனும் வேறு பிரபந்தங்களையும் இயற்றும் ஆற்றல் இவர்பால் உண்டென்பதை இவர் செய்யுட்களால் ஊகித்து அறியலாகும். போர் நிகழ்ச்சிகளையும் பேய்கள் போர்க்களத்திற் குரவையாடுதலையும் களவேள்வி நிகழ்தலையும் இவர் வர்ணிக்குமிடங்கள் பரணி நூலிற் கண்ட செய்திகளை நினைப்பூட்டுகின்றன. அகத்துறை யமைதிபெற இவர் பாடிய பல செய்யுட்களும் பொருளாற் கோவை நூற் செய்யுட்களைப் போன்றனவே. இப்புத்தகத்திலுள்ள 538, 542-ஆம் செய்யுட்களில் உலாப் பிரபந்தங்களில் வருவதைப் போன்ற செய்தி அமைந்துள்ளது.

    அன்னம் (83), கிளி (83, 157, 179, 183), குயில் (83), பறவைகள் (134, 183, 602), மேகம் (184, 672), வண்டு (657) என்பவற்றைத் தூதுவிடுக்கும் பொருளுடைய செய்யுட்கள்பல இவர் இயற்றியுள்ளார். அவை இவர் தூதுப் பிரபந்தமமைக்கும் திறலினரென்பதை உணர்த்தும். கலம்பகங்களிலும், மும்மணிக்கோவை, நான்மணிமாலை என்பவற்றிலும்