80குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

திரன், திருமகள். கலைமகள், துர்க்கை, சத்தமாதர்கள், முப்பத்து மூவர்கள் என்பவர்களுக்குரிய காப்பை அமைக்கின்றனர். இவருள் வெள்ளியம்பலவாணர், சித்திவிநாயகக் கடவுள், முத்துக்குமாரர் என்னும் மூவரும் தல மூர்த்திகள். வேளூர் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழில் திருமால், வைத்தியநாதர், தையனாயகியம்மை, கற்பக விநாயக்க் கடவுள், பிரமதேவர், தேவேந்திரன், திருமகள், கலைமகள், சத்தமாதர்கள், முப்பத்து முக்கோடி தேவர்களென்பவர்களுக்குரிய காப்புக் கூறினர். இவர்களுள் வைத்தியநாதர் முதல் மூவரும் தலத்து மூர்த்திகள். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் துர்க்கையின் காப்பு இருப்ப அது பின்னதிற் காணப்படவில்லை. வெள்ளியம்பலவாணர் காப்புக் கூறினபின் மீனாட்சியம்மைக்கும் கூறவேண்டியவர் பாட்டுடைத் தலைவி அவ் வம்பிகையாயிருத்தலின் கூறாமல், அக்குறையை நிரப்புவார் போன்று துர்க்கைக்குக் காப்புக் கூறினர் போலும். முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழில் தையல்நாயகியம்மை காப்பு இருத்தலைக் காண்க. பின்னதில் முருகக் கடவுள் காப்பு இல்லை, பாட்டுடைத் தலைவர் அவரே யாதலின்.

    குழந்தை பிறந்த ஏழாவது நாள் காப்பிடலென்னும் வழக்கும் ஒன்று உண்டு. அதனை யொட்டி இலக்கியவழக்கிலமைந்தது இக்காப்புப் பருவம்.

    இரண்டாவது செங்கீரைப் பருவமென்பது, பொருள் தெரியாத ஒலியை எழுப்பும் பருவத்தைக் குறிப்பது. இளங்குழந்தை ‘ங்க்’, ‘ங்க்’ என்று கூறக் கேட்டுத் தாய்மார் உவக்கும் பருவம் இது. இவ்வொலி மழலையைக் காட்டிலும் இளம் பருவத்தையுடையது. மழலையேனும் ஒரு வகையிற் பொருள் செய்தற்குரியது; இவ்வொலி வெறும் ஒலிமாத்திரமேயாய்த் தோற்றுவது. தொடையமைதிகள் இல்லாத ஒன்றைச் செந்தொடையென்பது போலச் சொல்லுக்குரிய அமைதியில்லாததைச் செங்கீரென்றனர் போலும்; கீர் - சொல். செங்கீரையை ஒரு நிருத்த விசேஷமென்று சொல்வர் பெரிய வாச்சான் பிள்ளை. செங்கீரையென்பதன் சொற்பொருள் முன்னே கூறியதாயினும் செங்கீரை யாடுகவென்னும் வழக்கை நோக்கின் அதனைக் குழந்தைகள்பால் இயல்பினமைந்த ஆடல் விசேஷமென்றே கொள்வது பொருந்தும். இவ்வாடலை இவர்,