மலர்களும் கலந்தமைத்த கலம்பகமால் யென்று பொருள் கொள்வதே பொருந்தும்; “களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த, அலங்கலந்தொடையல்” (திவ். திருப்பள்ளி. 5); ‘பல பூக்கள் கலந்து நெருங்கிய கலம்பகமாகிய மாலை; (பெரும்பாண். 174, ந.) என்பவற்றைக் காண்க. கதம்பமென்பது இங்ஙனம் திருந்தது போலும். இப்பிரபந்தத்தில் பலவகைப் பொருள்களும் அகப்புறத்துறைகளிற் பலவும் பலவகை யாப்புக்களும் விரவிக் கலந்தமையின் இப்பெயர் வந்தது.
சிலவகை மகளிரைக் கண்டு காமுற்ற இளைஞர்கள் தம் காமக்குறிப்புத்தோன்ற அவர்களோடு பேசும் உலகியல்பைத் தழுவி மதங்கியார், பிச்சியார், கொற்றியார், இடைச்சியார், வலைச்சியாரென்னும் உறுப்புக்கள் கலம்பகங்களில் அமைக்கப்படும். மதங்கி யென்பவள் வாள் சுழற்றி ஆடுபவள்; பிச்சியென்பவள் சிவவேடம் புனைந்து வருபவள்; கொற்றி வைணவ வேடத்தினள். இவ்வுறுப்புக்களில் அவ்வம்மகளிருடைய தொழிலுக்குரிய செய்திகள் தோற்றும்படி சிலேடையமைத்தல் புலவர் நெறி. இவற்றையன்றி மறம், குறம், சம்பிரதம், சித்து, களி, ஊர், அம்மானை, ஊசல், பாணாற்றுப்படையென்னும் உறுப்புக்கள் கலம்பகங்களில் வரும். மறமென்பது மறச்சாதி மகளொருத்தியை ஒரு மன்னன் மணம் பேசிவிடுப்ப அச்செய்தியை அறிவிக்கும் திருமுகத்தைக் கொணர்ந்த தூதனை நோக்கி அச்சாதியினர் தலைவன் சினந்து கூறுதல். குறத்தி குறிகூறுவது குறம். பிறரால் இயற்ற முடியாத அரிய செயல்களைத் தான் செய்து விடுவதாகத் தோற்றும்படி ஒருவன் கூறுவதாக அமைப்பது சம்பிரதம். இரசவாதம் செய்யும் ஆற்றலுடைய சித்தனாகத் தன்னை ஒருவன் கூறிக்கொள்வது சித்து; இவ்வுறுப்பில் இரசவாத சம்பந்தமான பொருள் தோற்றுவதோடு இயல்பாக உள்ள பொருளும் தோற்றும்படி அமைப்பர். சித்தர்களுடைய நூல்களில் வரும் செய்யுளைப்போல இச்செய்யுளிலும் அப்பா என்ற விளி வரும் (161). இவ்வாசிரியர் தாம் இயற்றிய இரண்டு கலம்பகங்களிலும் இவ்வுறுப்புக்குரிய செய்யுட்கள் இரண்டை அமைத்ததன்றிப் பண்டார மும்மணிக்கோவையிலும் இத்தகைய பொருளமைதியையுடைய செய்யுளொன்றை (589) அமைத்துள்ளார். கட்குடியன் கூறுவதாக அமைவது களி; கட்குடித்தலும் ஊனூகர்தலும் பெருமைதருஞ் செயல்களென்று தோற்
|