றும்படி அக்கூற்று அமைந்திருக்கும். பாட்டுடைத் தலைவனது ஊரைச் சிறப்பிப்பது ஊர். மகளிர் அம்மானை யாடுதற்கும் ஊசலாடுதற்கும் உரிய செய்யுட்கள் முறையே அம்மானையும் ஊசலும் ஆகும். அம்மானை மூவர் பாடுவதாக அமைவது. இவ்வுறுப்புக்களுக்கு இலக்கியமாக உள்ள செய்யுட்களை இவ்வாசிரியர் சொற்பொருட்சுவை திகழப் பாடியுள்ளார். நான்மணிமாலை யென்பது வெவ்வேறு வகையான நான்கு மணிகளைத் தொடுத்தமைத்த மாலைபோல வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரியவிருத்தம், ஆசிரியப்பா என்பவை முறையே அந்தாதியாக அமைய நாற்பது செய்யுட்கள் பாடுவது. இவர் பாடிய திருவாரூர் நான்மணிமாலையில் அகத்துறைச் செய்யுட்கள் பல விரவி வருகின்றன. மும்மணிக் கோவை யென்பது மூன்று வேறு மணிகளாலாய மாலையைப்போல ஆசிரியப்பா, வெண்பா, கலித்துறையென்பன அந்தாதியாக அமைய முப்பது செய்யுட்கள் பாடுவது. இவர் பாடியுள்ள இரண்டு மும்மணிக் கோவைகளுள், சிதம்பர மும்மணிப் கோவையிலுள்ள 474-ஆம் செய்யுள் மாத்திரம் அகத்துறையமைதியை யுடையது; ஏனையவை வேறு கற்பனைகள் தோன்ற அமைந்தவை. பண்டார மும்மணிக் கோவையில் அகத்துறைச் செய்யுட்களே இல்லை.
இவர் இலக்கண இலக்கியங்களில் வல்லவரென்பதை இதுகாறும் எடுத்துக் காட்டிய செய்திகள் விளக்கும். முந்தையோர் நூல்களில் இவருக்குள்ள ஆராய்ச்சியும் பழக்கமும் வேறொரு வகையாலும் பெறப்படும். அந்நூல்களிலுள்ள கருத்துக்களையும் சொற்களையும் இவர் எடுத்து ஆள்கின்றார். குறிப்புரையில்அங்கங்கே காட்டப்பெற்றுள்ள ஒப்புமைப் பகுதிகளால் இதனை உணரலாம், கந்தர் கலிவெண்பாவில் சிவஞானபோதம், சிவஞானசித்தியார் முதலிய சைவசித்தாந்த சாஸ்திரக் கருத்துக்களும் கந்தபுராணச் செய்திகளும் வந்துள்ளன. முருகக் கடவுளுடைய திருமுகங்களின் வருணனையும் திருக்கரங்களின் வருணனையும் திருமுருகாற்றுப்படைக் கருத்தைத் தெரிந்து பெயர்த்து அமைத்துக் கொண்டவையே யாகும்.
|