ஆராய்ச்சி85

தொல்காப்பியச் சொல்லமைதி

    தொல்காப்பியத்திலிருந்து இவர் சில சொற்றொடர்களை எடுத்தாள்கின்றார்.

“எம்ம னோரையு மிடித்துவரை நிறுத்தி”
(460)
என்பதிலுள்ள இடித்துவரை நிறுத்தியென்னும் தொடர்,
“இடித்துவரை நிறுத்தலு மவர தாகும்”
(கற்பு. 14)
என்னுங் கற்பியற் சூத்திரத்திலிருந்து எடுத்துக்கொண்டது.
“வேம்புங் கடுவுந் தேம்பிழி யாகச்
  செஞ்செவிகைப்பயான்றெரித்தசின்மொழி”
(699)
என்னும் அடிகள்,
“வேம்புங் கடுவும் போல வெஞ்சொற்
  றாங்குத லின்றி“
(செய்யுள். 112)
என்பதன் நினைவிலிருந்து எழுந்தவையாகும்.

குறளோடு ஒப்புமை

    திருக்குறளில் இவர் சிறந்த பயிற்சியுடையவர். நீதிநெறி விளக்கம் திருக்குறளிற் கண்ட கருத்துக்களை வேறு உருவத்திலே அமைத்துக் கூறுகின்றது. சில இடங்களில் திருக்குறளிலுள்ள சொற்றொடர்களையும் பொன்னேபோற் போற்றி எடுத்தாண்டுள்ளனர்.

“மடங்கொன் றறிவகற்றுங் கல்வி”
(208)
என்பதில் அறிவகற்றுமென்பது அறிவை விரிவுபடுத்துமென்னும் பொருளில் வந்தது. இத்தொடர்,

“அறிவகற்றும். ஆகலூ ழுற்றக் கடை”
(குறள், 372)
என்பதினின்றும் எடுத்துக்கொண்டதாகும்.
“மனைத்தக்காண் மாண்பில ளாயின்”
(215)
என்பதில்,
“மனைத்தக்க மாண்புடைய ளாகி”
(குறள், 51)
என்பதன் சார்பு உள்ளது.
“பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார்
  கிழமை பிறிதொன்றுங் கொள்ளார்”
(252)
என்பதிற் பழமையும் கிழமையும் ஒருங்கே அமைத்ததற்கு,
“ பழமை யெனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”
(குறள்,801)
என்னும் குறளின் நினைவே காரணம்.