90குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

“மலிபுகழ் நிலவொடு மடுதிறல் வெயிலெழ
 மதிகதிர் வலம்வரு வெற்பொத்து நின்றன”
(603)
என்பவற்றில் இவ்விரண்டு செய்திகளையும் ஒருங்கே அமைத்தனர்.

    மகளிர் உதைக்க அசோகு மலர்தல் (96), சந்திரகாந்தம் நிலா வெறிக்குங்காலத்தில் நீர்சுரத்தல் (373, 581), சந்திரன் சஸ்யாதி பதியாதல் (68, 410, 412), அவன்பாலுள்ள அமுதத்தைத் தேவர் உண்ணுதல் (65, 74, 411), சந்திரன் சூரியனிடத்திலிருந்து ஒளிபெருதல் (71), தேவர் கண்ணால் துய்த்தல் (1 : 106), அவர் இமையாமை (196), சகரம் கீழ்கடலைத் தோண்டியது (373), கோயிலுக்கு ஏழுபிராகாரம் இருத்தல் (695), நால்வகையோனி, எழுவகைப்பிறப்பு (463) என்பவைபோன்ற செய்திகள் வடமொழி தென்மொழி நூல்களிற் பயிலும் வழக்கைத் தழுவி யமைக்கப்பெற்றவை.

    இசைக்குக் கல் உருகுமென்பது நூல்வழக்கு; இதனை இவர்,

“கொத்து மணித்திர ளிற்செயு மம்மனை .... சிந்தியிட”
(80)
என்பதால் உணர்த்துகின்றார்.
    வண்டு இசைபாடப் போது மலருமென்பது ஓர் அருமையான செய்தி, இதனை,

“வெள்ளித் தகட்டுநெட் டேடவிழ்த் தின்னிசை
விரும்புஞ் சுரும்பர் பாட”
(10),
“குழலிசை பழகளி பாடிடக் கேட்டுடை மடலவிழ் துளபம்”
(12)
“அறுகாற் றும்பிபசுந் தோட்டுக் கதவந் திறப்ப”
(60),
“பண்மலரக் கண்மலருங் காவலரு மேடவிழ்க்கும்”
(630)
என்பவற்றில் இவர் கூறுகின்றார்.
    மலர்கள் குறித்தகாலத்தில் மலர்ந்து பொழுதையறிவித்தலின் போதென்னும் பெயரையுடையனவாயின; இதனை இவ்வாசிரியர்,

“போதுதெரி யாமையிற் குமுதமொடு சதவிதழ்ப்
   போதுமே யிருபோதையும்
தெரிக்குந் தடம்பணை யுடுத்ததமிழ் வேளூர”
(434)
என்பதில் தெரிவிக்கின்றார்.
    ஆடவரது மேனிச்சாயல்க்கு நீரின்சாயலை உவமித்தலும், அவர்மேனி முல்லைமணமுடைய தென்பதும் நல்லிசைச் சான்றோர் வழக்கு; இவரும் அவ்வழக்கை யடியொற்றி,