ஆராய்ச்சி91

“முருகுயிர்க்கு நறுந்தெரியன் மொய்குழலின் மையுண்கட்
 பொருகயற்குன் றிருமேனி புதுவெள்ளப் புணரியே”
“தேன்மறிக்கும் வெறித்தொங்க லறற்கூந்தற் றிருந்திழைகண்
  மான்மறிக்குன் றிருமேனி மலர்முல்லைப் புறவமே”
(537)
என்கின்றார்.
“காசிக் கடவுணுதல், விழியு மிடக்கண்ணுன்
  வெண்ணெருப்பே”
(626)
என்பதில் நெருப்புக்கு வெண்ணிறங் கூறியது நியாய நூலார் வழக்கைப் பின்பற்றியது.

இசைச் செய்திகள்

    துறவறத்தாருடைய இயல்பு கூற வந்த இம்முனிவர்,

“பெண்மை வியவார் பெயரு மெடுத்தோதார்
 கண்ணொடு நெஞ்சுறைப்ப நோக்குறார் - பண்ணொடு
 பாடல் செவிமடார்”
(290)
என்றுரைக்கின்றார். பண்ணொடு பாடலைச் செவிமடாமை துறவிகள் இயல்பென்று கூறினும், பெண்டிர்பாடும் பண்ணும் பாடலும் செவிமடாரென்றே பொருள் கொள்ளுதல் வேண்டும். இல்லையேல் இம்முனிவர் ‘பண்ணிடத்தும் பாடலிடத்தும் வெறுப்புடையர் போலும்!’ என்பதோர் ஐயம் உண்டாகும். இவர் இசையினிடத்து விருப்பம் உடையவர்; இசை நூற் செய்திகளைப் பலவிடங்களில் எடுத்து ஆள்கின்றார்.

“பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல்காய்”
(705)
என்று சகலகலாவல்லியை இவர் வேண்டிக்கொள்ளும்பொழுது பண்ணை முதலிலே வைத்தல் காண்க.

    பண்ணைப் (290, 539, 625, 705) பொதுவகையாற் குறித்தலோடு விளரிப்பண் (81), செவ்வழிப்பண் (151, 352) என இரண்டு பண்களின் பெயர்களைக் குறிப்பர். மந்தர மத்திம தாரங்களாகிய மூன்று ஸ்தாயிகளை மூவகை நிலயம் (581) என்பர். ஏழுஸ்வரங்களை. “ஏழிசை” (312, 656) என்றும், “ஏழு சுரம்” (581) என்றும் குறிப்பிடுவர்.

    குழலிசையை வேயிசை (203), தீங்குழற்கானம் (677) எனப் பாராட்டுர். வீணை வாசிப்போரை,